மாணவர்களுக்கு சாதிய அடையாளங்களுடன் அடையாள அட்டை வழங்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் - டிடிவி தினகரன்

மாணவர்கள் மத்தியில் சாதிய பாகுபாடை ஆழமாக விதைக்க முயற்சிக்கும் தவெக அரசின் முடிவு கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அவரவர் சாதி சார்ந்த அடையாளங்களுடன் கூடிய அடையாள அட்டை வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் அமைச்சர் ஊடகங்களுக்கு அளித்திருக்கும் பேட்டி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் மனிதநேயத்தை வளர்க்கும் இடமான பள்ளிகளில், மாணவர்களின் அடையாள அட்டையில் அவரவர் சாதி சார்ந்த விவரங்களைக் குறிப்பிட முனைவது பள்ளி வளாகங்களுக்குள்ளாகவே சாதிய அடையாளங்களை வலுப்படுத்தும் ஆபத்து மிக்க முயற்சியாகும்.

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் ஏற்கனவே ஊடுருவியிருக்கும் சாதிய பாகுபாடை போக்க வேண்டிய அரசு, அவர்களின் மனதில் சாதிய அடையாளத்தை ஆழமாக விதைப்பது சமூக நீதிக்கும், அரசியலமைப்புச் சிந்தனைகளுக்கும் முற்றிலும் எதிரானது ஆகும்.

எனவே, அரசுப்பள்ளிகள் என்பது மாணவர்களை ஒன்றிணைக்கும் பாலமாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களை சாதியின் பெயரில் பிரிக்கும் கருவியாக இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து, மாணவர்களுக்கு சாதிய அடையாளங்களுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் முடிவை உடனடியாக திரும்பப் பெற்றிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com