தனியார் பஸ்களை வாடகைக்கு இயக்கும் முடிவை கைவிட வேண்டும் - அன்புமணி

கோப்புப்படம்
தேசியமயமாக்கப்பட்ட வழித்தடங்களை தனியாருக்குத் தாரை வார்க்கும், திமுக அரசின் இந்த திட்டம் கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி தெரிவித்தார்.
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் விடுமுறைக்காலங்களில் வெளியூர் செல்லும் பயணிகளின் தேவையை சமாளிப்பதற்காக மட்டும் இதுவரை தனியார் பஸ்கள் வாடகைக்கு எடுத்து இயக்கப்பட்டு வந்த நிலையில், இனி எல்லாக் காலங்களிலும், சென்னை உள்ளிட்ட தேசியமயமாக்கப்பட்ட வழித்தடங்களிலும் தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்க திமுக அரசு தீர்மானித்திருக்கிறது. தேசியமயமாக்கப்பட்ட வழித்தடங்களை தனியாருக்குத் தாரை வார்க்கும் நோக்கம் கொண்ட திமுக அரசின் இந்த பிற்போக்கானத் திட்டம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தீபாவளி திருநாள் போன்ற விழாக்காலங்களில் சொந்த ஊர் செல்ல விரும்பும் மக்களின் வசதிக்காக தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்கும் திட்டத்தை கடந்த ஆண்டில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நடைமுறைப்படுத்தின. தவிர்க்க முடியாத தருணங்களில் மட்டும் தனியார் பஸ்கள் வாடகைக்கு எடுத்து இயக்கப்படும், அதற்காக தனியார் பஸ்களுக்கு கி.மீக்கு ரூ.51.25 வீதம் வாடகை வழங்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை அறிவித்திருந்தது.
இப்போது அடுத்தக்கட்டமாக அனைத்து வழித்தடங்களிலும், அனைத்துக் காலங்களிலும் தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்க முடிவு செய்துள்ள திமுக அரசு, இதற்காக 1989-ஆம் ஆண்டின் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின் 288 ஏ பிரிவை திருத்த தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக இன்று ஜனவரி 7-ஆம் தேதி வரை பொதுமக்கள் கருத்துகளை கேட்கவிருக்கும் திமுக அரசு, அதன்பின்னர் தனியார் பஸ்களை அனைத்து வழித்தடங்களிலும் வாடகைக்கு எடுத்து இயக்க முடிவு செய்திருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது ஆகும்.
அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் போதிய பஸ்கள் இல்லை என்பதால் தான் தனியார் பஸ்களை இயக்க ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது என்று அரசின் சார்பில் கூறப்படும் காரணத்தை ஏற்க முடியாது. தனியார் பஸ்களை போக்குவரத்துக் கழகங்களில் திணிக்க வேண்டும் என்பதற்காகத் தான் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் போதிய எண்ணிக்கையில் பஸ்கள் இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 12,000 புதிய பஸ்களை வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அரசு நினைத்திருந்தால் அந்த பஸ்களை எப்போதோ வாங்கியிருக்கலாம். ஆனால், அதில் ஐந்தில் ஒரு பங்கு பஸ்கள் கூட வாங்கப்படவில்லை. மீதமுள்ள பஸ்களை குறித்த காலத்தில் வாங்க முடியாத அளவுக்கு அரசை தடுத்தது யார்?
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் வாயிலாக இயக்கப்பட்டு வந்த பஸ்களின் எண்ணிக்கை 20,944-லிருந்து 20,508 ஆக குறைந்துவிட்டது. அதேபோல், பணியாளர்களின் எண்ணிக்கையும் ஒரு லட்சத்து 26,089 என்ற அளவிலிருந்து ஒரு லட்சத்து 7 ஆயிரமாக குறைந்து விட்டது. இப்படியாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களை திட்டமிட்டு சீரழித்து வரும் திமுக அரசு, போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்குவதன் அடுத்தக்கட்டமாகவே அனைத்து வழித்தடங்களிலும் தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்கத் துடிக்கிறது. மிகவும் ஆபத்தான இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






