தி.மு.க. தேர்தல் அறிக்கை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது - பிரேமலதா

தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் நிச்சயம் வெற்றி பெறும் என்று பிரேமலதா கூறினார்.
தி.மு.க. தேர்தல் அறிக்கை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது - பிரேமலதா
Published on

சேலம்,

சேலம் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த தே.மு.தி.மு.க. பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நான் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடம் உற்சாக வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக தி.மு.க. தேர்தல் அறிக்கை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. வீட்டு உபயோக பொருட்கள் வாங்க ரூ.8 ஆயிரம் கூப்பன் வழங்குவது குறித்து பெண்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துள்ளது.

இதனால் தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் நிச்சயம் வெற்றி பெறும். அண்ணன் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார். தி.மு.க. 7-வது முறையாக ஆட்சி அமைக்கும். கடலூரில் நடந்த பிரசார கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசும் போது எனது பெயரை குறிப்பிட்டபோது நான் எழுந்திருக்காதது குறித்து தேவையில்லாமல் எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக நானும், திருமாவளவனும் போனில் பேசிவிட்டோம். மக்கள் நலக்கூட்டணியில் அங்கம் வகித்தபோது, விஜயகாந்த் மற்றும் திருமாவளவனுக்கு இடையே நெருங்கிய நட்பு இருந்தது. இது அனைவருக்கும் நன்றாக தெரியும். ஆனால் தற்போது தேவையில்லாமல் பிரச்சினையை கிளப்பி விடுகிறார்கள். விருதாச்சலத்தில் எனக்கு ஆதரவாக திருமாவளவன் வாக்கு சேகரிக்க வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com