

சென்னை,
நாளுக்கு நாள் தொடரும் தேர்தல் ஆணையத்தின் சதிச்செயல்கள் மீண்டும் ஒருமுறை அப்பட்டமாக அம்பலமாகியுள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தேர்தல் ஆணையத்தின் சொந்த மென்பொருளான ERONet மூலமாக வாக்காளர்களுக்கு எதிராகத் தானியங்கி முறையில் ‘படிவம் 7’ உருவாக்கப்பட்டு, லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ள உண்மை தற்போது வெளிவந்துள்ளது. இது ஏதோ தொழில்நுட்பக் கோளாறு அல்ல; திட்டமிட்டு வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் அப்பட்டமான ஜனநாயகத் துரோகம்.
தேர்தல் நடைமுறைகளின்படி நடுநிலை நீதிபதியாகச் செயல்பட வேண்டிய தேர்தல் பதிவு அதிகாரிகளே (ERO), புகார்தாரர்களாக மாறித் தங்களின் டிஜிட்டல் கையொப்பத்துடன் இந்தப் படிவங்களை உருவாக்கியுள்ளனர். தேர்தல் கையேடு 2024-ன் படி, எந்தவொரு தேர்தல் அதிகாரியும் சுயமாகப் படிவம் 7-ஐத் தாக்கல் செய்ய விதிகளில் இடமே கிடையாது. அதே தொகுதியைச் சேர்ந்த சக வாக்காளர் மட்டுமே ஆட்சேபனை தெரிவிக்க முடியும் என்ற அடிப்படை விதியைத் தேர்தல் ஆணையத்தின் மென்பொருளே வெளிப்படையாகக் காற்றில் பறக்கவிட்டுள்ளது.
மோடி - அமித் ஷா கூட்டணியின் ஏவல் அமைப்பாகச் செயல்பட்டு வரும் தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக விரோத முகமூடி நாளுக்கு நாள் மக்கள் மன்றத்தில் அப்பட்டமாகத் தோலுரிக்கப்பட்டு முழுமையாக அம்பலமாகி வருகிறது! ERONet மென்பொருளில் இதுபோன்ற சட்டவிரோதத் தானியங்கிப் படிவங்களை உருவாக்க உத்தரவிட்டது யார் என்பதைத் தேர்தல் ஆணையம் உடனடியாக நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். இந்த குறுக்கு வழியில் நீக்கப்பட்ட அனைத்து வாக்காளர்களின் மாநில மற்றும் தொகுதி வாரியான முழுப் பட்டியலையும் தேர்தல் ஆணையம் பகிரங்கமாக வெளியிட வேண்டும். கள ஆய்வு முழுமையாக நடைபெறாமல் நீக்கப்பட்ட ஒவ்வொரு வாக்காளரின் பெயரையும் உடனடியாக மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் அரசியல் சாசனம் வழங்கியுள்ள வாக்குரிமையை, மென்பொருளின் பின்னணியில் நின்று அதிகார வர்க்கம் திருடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தேர்தல் ஆணையத்தைப் பாஜக - ஆர்.எஸ்.எஸ்-ன் பிடியிலிருந்து விடுவித்து ஜனநாயகத்தைக் காக்கும் வரை நமது அறப்போராட்டம் ஓயாது!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.