

கள்ளக்குறிச்சி,
எச்.வினோத் இயக்கத்தில் முதல்-அமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை கடந்து கடந்த 23-ந்தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. முதல்-அமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படம் என்று கூறப்படுவதால், இந்த படத்தை விஜய் ரசிகர்களும், த.வெ.க. தொண்டர்களும் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.
திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே பல்வேறு த.வெ.க. அமைச்சர்கள் படத்தின் முதல் காட்சியை பார்த்தனர். அந்த வகையில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சென்னையில் உள்ள திரையரங்கில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பார்த்தார். பின்னர் இந்த படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம் ‘ஜனநாயகன்’. அந்தப் படம் பலருக்குப் பாடமாக அமைந்து இருக்கிறது. ஜாதி மதங்களை யார் எப்படி பிரிக்க முயற்சிக்கிறார்கள் என்பது தெளிவாக காண்பிக்கப்பட்டிருந்தது.
மாணவர்களின் போராட்டத்தை ஜனநாயகன் படம் மழுங்கடித்து விட்டதாக கூறுகிறார்கள். இந்த படத்தைப் பார்ப்பதன் மூலமாக மூளைக்கு சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் ஏற்படுமே தவிர, மாணவர்களை மூளைச் சலவை செய்யும் படமல்ல” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ஜே.சி.டி.பிரபாகரின் கருத்து குறித்து அமைச்சர் வன்னி அரசிடம் கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “ஜனநாயகன் படத்தில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து பேசப்பட்டுள்ளது. பெண் பிள்ளைகளை புலிகளைப் போல் வளர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ், பெரியாரின் கருத்துகள் அதில் இருக்கின்றன. ‘ஜனநாயகன்’ திரைப்படம் எந்த வகையிலும் சீர்கேடாக இல்லை என்பதே என்னுடைய கருத்து” என்று தெரிவித்தார்.