

சென்னை,
தமிழகத்தில் த.வெ.க. தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ளது. புதிய அரசு பதவி ஏற்ற பின்னர், சட்டசபையின் முதல் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கூடுகிறது. சட்டசபையின் முதல் கூட்டம் என்பதால், இந்த கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கும். இதற்காக அவருக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.
பேரவை மண்டபத்தில் கூடவுள்ள கூட்டத்தில், கவர்னர் அர்லேகர் பங்கேற்று, உரையாற்றுவார். புதிய அரசின் திட்டங்கள், நோக்கங்கள் அந்த உரையில் இடம் பெறும். இன்று காலை 9.50 மணிக்கு சட்டசபைக்கு வரும் கவர்னருக்கு கோட்டை பிரதான கட்டிடத்தின் 2-வது நுழைவு வாயில் அருகே போலீஸ் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்படும். சபாநாயகர், சட்டசபை செயலாளர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து கவர்னரை வரவேற்பார்கள்.
தொடர்ந்து சிவப்புக் கம்பள விரிப்பில் நடந்து வரும் கவர்னர், கூட்டத்தில் பங்கேற்று ஆங்கிலத்தில் உரையாற்றுவார். அந்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பார். அதோடு அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பாகும். பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் சட்டசபையின் அலுவல் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும்.
இந்த கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப் படும். மேலும் இந்த கூட்டத்தொடரில் புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் விஜய் வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அதே நேரம் தமிழகத்தில் தற்போது நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், கொலைகள், மின்வெட்டு பிரச்சினைகள், பயிர்க்கடன் தள்ளுபடி, எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளன. இதனால் கேள்வி நேரத்தில் அனல் பறக்கும் கேள்விகள், அதற்கு அரசு சார்பில் அளிக்கப்படும் அதிரடி பதில்கள் என இந்த கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.