

சென்னை,
இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், ம.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதன்படி, எவ்விதக் கருத்து வேறுபாடுகளுக்கும் இடமளிக்காமல் ஒட்டுமொத்தமாக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆர்.) விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் வழக்குத் தாக்கல் செய்வது, நாட்டில் நிலவும் கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத திண்டாட்டம் குறித்து விவாதிக்க மத்திய அரசு உடனடியாக அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும். மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதேபோல, இந்தியா கூட்டணி கூட்டத்தை 2 மாதங்களுக்கு ஒரு முறை நடத்த வேண்டும் எனவும், அடுத்த கூட்டம் ஆகஸ்டு 8-ந்தேதி ஐதராபாத்தில் கூட்டவேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டம் தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் மனநிறைவை அளித்தது. முரண்பாடுகளின்றி அனைவரும் ஒத்த கருத்துடையவர்களாக திகழ்வதில் பெருமிதம் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.