திமுக ஆட்சியை அகற்ற கஞ்சா சீரழிவு என்ற ஒரு காரணமே போதும் - அன்புமணி

குற்றங்கள் குறித்த செய்திகளையும், விமர்சனங்களையும் வெளியில் வராமல் தடுப்பதில் தான் திமுக அரசு தீவிரம் காட்டுகிறது என அன்புமணி தெரிவித்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
திருவள்ளூரை அடுத்த ஒண்டிக்குப்பம் என்ற இடத்தில் அப்பாவி இளைஞர்கள் இருவரை கஞ்சா போதைக் கும்பல் கற்களை போட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்ததால் ஏற்பட்ட அச்சமும், பதற்றமும் இன்னும் விலகாத நிலையில், கிட்டத்தட்ட அதே நேரத்தில் அதே மாவட்டத்தில் மேலும் இரு இடங்களில் கஞ்சா போதைக் கும்பல் அடுத்தடுத்து வெறியாட்டங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. கஞ்சா போதையில் நடைபெறும் வன்முறைகளும், குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கஞ்சா சீரழிவைக் கட்டுப்படுத்துவதற்கு திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
திருத்தணியை அடுத்த தாழவேடு இருளர் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கஞ்சா போதையில், இரு சக்கர ஊர்திகளில் நுழைந்த 6 இளைஞர்கள் அங்குள்ள வீடுகள், மின் விளக்குகள், குடிநீர் குழாய்கள் ஆகியவற்றை உடைத்து சூறையாடியது. அங்கு வாழும் மக்களையும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் வசை பாடினார்கள். இந்த அட்டூழியத்தைத் தட்டிக் கேட்ட ராமசாமி என்பவரை கஞ்சா போதைக் கும்பல் இரும்புக் கம்பியால் கொடூரமான முறையில் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், திருத்தணி - திருப்பதி நெடுஞ்சாலையில் மத்தூர் தொடர்வண்டி கடவுப் பாதை அருகில் கஞ்சா போதையில் தகராறு செய்து கொண்டிருந்த இரு இளைஞர்கள், அவ்வழியே சென்ற மகிழுந்து மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கியதில் அதில் பயணம் செய்த ஹரிதாஸ், சாய் லட்சுமி என்ற இருவர் படுகாயம் அடைந்தனர்.
கஞ்சா போதையில் இவ்வளவு குற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில் அது குறித்து வாயைக் கூட திறக்க மறுக்கிறார் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். கொடூரமான முறையில் கொல்லப்பட்ட இளைஞர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்கு கூட அவருக்கு மனம் வரவில்லை. மாறாக, அரசு எந்திரத்தின் அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி இத்தகைய குற்றங்கள் குறித்த செய்திகளையும், அது குறித்த அரசியல் தலைவர்களின் விமர்சனங்களையும் வெளியில் வராமல் தடுப்பதில் தான் திமுக அரசு தீவிரம் காட்டுகிறது. இந்த தீவிரத்தையும், வேகத்தையும் கஞ்சாவைக் கட்டுப்படுத்துவதில் காட்டினாலாவது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் கஞ்சா போதையில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட இரு தாக்குதல்கள், பொதட்டூர்பேட்டைக்கு அருகில் அரசு பேருந்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்களால் சூறையாடப்பட்டது, ஒண்டிக்குப்பத்தில் இரு இளைஞர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டது என திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் கஞ்சா போதையின் தாக்கத்தில் நடந்த குற்றங்களின் பட்டியல் மிகவும் நீளமானது.
திமுக ஆட்சியில் கல்வித்துறை சீரழிவு, மருத்துவத்துறை சீரழிவு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தாமை, 87 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமை, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் சமூகநீதியை பலி கொடுத்தது, வரலாறு காணாத வகையில் மின்சாரக் கட்டணம், வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்டவற்றை உயர்த்தியது என திமுக ஆட்சியை அகற்றுவதற்கான காரணங்கள் ஏராளமாக உள்ளன.
ஆனால், அவை அனைத்தையும் விட தமிழகத்தின் எதிர்காலமான இளைஞர்களை கஞ்சாபோதைக்கு அடிமையாக்கி, அவர்களை சமூகத்திற்கு எதிரானவர்களாகவும், வன்முறைவாதிகளாகவும் மாற்றிய ஒற்றைக் காரணமே திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு போதுமானது. இன்னும் சில வாரங்களில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக அரசை அகற்றும் ஜனநாயக, சமூகக் கடமையை தமிழ்நாட்டு மக்கள் செய்து முடிப்பார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






