தமிழ்நாடு - கர்நாடகா இடையே மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் மேகதாது பிரச்சினை: இதற்கு தீர்வுதான் என்ன?

ஆகஸ்டு 3-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை பெங்களூருவில் சந்தித்து பேச இருக்கிறார்.
தமிழ்நாடு - கர்நாடகா இடையே மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் மேகதாது பிரச்சினை: இதற்கு தீர்வுதான் என்ன?
Published on

சென்னை,

தமிழ்நாடு - கர்நாடகா இடையே மேகதாது அணை பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் நிலையில், இதற்கு தீர்வுதான் என்ன? என்பதை பற்றி பார்க்கப்போகிறோம்.

காவிரி நதிநீர் பிரச்சினை

கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இருமாநிலங்களுக்கு இடையே பாயும் காவிரி ஆறு 805 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. கர்நாடகாவின் தலைக்காவிரியில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, அம்மாநிலத்தில் 320 கி.மீ. நீளமும், தமிழ்நாட்டில் 461 கி.மீ. தூரமும், இருமாநில எல்லையில் 24 கி.மீ. நீளமும் பாய்ந்து இறுதியாக மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வங்கக்கடலில் கலக்கிறது.

தமிழ்நாடு - கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பிரச்சினை என்பது இன்று, நேற்றல்ல, ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே தொடங்கியிருக்கிறது. நதிநீர் பங்கீடு தொடர்பாக 1892 மற்றும் 1924-ம் ஆண்டுகளிலேயே ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. சென்னை மாகாணம் - மைசூர் சமஸ்தானம் இடையே 50 ஆண்டு கால ஒப்பந்தம் கையெழுத்தானது.

சட்டப் போராட்டம்

ஆனால், இந்த ஒப்பந்தம் 1974-ம் ஆண்டு காலாவதியான பிறகு, நவீன கால பிரச்சினையாக மீண்டும் உருவெடுத்தது. அதன்பிறகு, தமிழக முதல்-அமைச்சர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் சட்டப்போராட்டம் நடத்தியதன் விளைவாக, ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

கோர்ட்டு உத்தரவுப்படி, தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

மேகதாதுவில் புதிய அணை

இந்த ஆண்டு இதுவரை தென்மேற்கு பருவமழை குறைவாகவே பெய்துள்ள நிலையில், கர்நாடக அரசு தமிழகத்திற்கு ஜூன் மாதம் 2.915 டி.எம்.சி.யும், ஜூலை மாதம் 0.459 டி.எம்.சி.யும் மட்டுமே தண்ணீர் வழங்கியுள்ளது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி.யும், ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி.யும் தண்ணீர் வழங்கியிருக்க வேண்டும்.

இந்தப் பிரச்சினை ஒருபுறம் இருக்க, கர்நாடகா மாநிலத்தில் மேகதாது எனும் இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான அறிவிப்பை கடந்த 2013-ம் ஆண்டு கர்நாடக அரசு வெளியிட்டது. அது காவிரி பிரச்சினையை மேலும் பூதாகரமாக்கியது.

காவிரியின் குறுக்கே 5-வது அணை

ஏற்கனவே, காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகாவில் ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய 4 அணைகளும், தமிழ்நாட்டில் மேட்டூர், கல்லணை, முக்கொம்பு ஆகிய 3 அணைகளும் இருக்கின்றன.

தற்போது, கர்நாடக முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவக்குமாரின் சொந்தத் தொகுதியான கனகபுராவில்தான் மேகதாது வருகிறது. எனவே, காவிரியின் குறுக்கே எப்படியும் 5-வது அணையை கட்டிவிட வேண்டும் என்று அவர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

மத்திய இணை மந்திரியின் பதில்

இந்த நிலையில், நாடாளுமன்ற ராஜ்ய சபாவில் சமீபத்தில், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், 'மேகதாது அணை கட்ட தமிழகம், கேரளா, புதுச்சேரி அரசுகளின் ஒப்புதலை கர்நாடகா பெற்றுள்ளதா? மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள அத்திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?' என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மத்திய நீர்வளத் துறை இணை மந்திரி ராஜ் பூஷண் சவுத்ரி, 'காவிரி நீர் தொடர்பான வழக்கில், 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான அணையையும் கர்நாடக அரசு கட்டுவதற்கு, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற வேண்டும் என, எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை' என்று கூறினார்.

மத்திய இணை மந்திரியின் இந்த பதில் கர்நாடகா அரசுக்கு ஆதரவாகவும், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளுக்கு எதிராகவும் அமைந்தது.

மீண்டும் விஸ்வரூபம்

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு - கர்நாடகா இடையே மேகதாது பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஆகஸ்டு 3-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை பெங்களூருவில் சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால், இந்த சந்திப்புக்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் செல்லக்கூடாது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக விவசாயிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இருமாநில எல்லையில் பதற்றம்

பதிலுக்கு கர்நாடகாவிலும் சில எதிர்க்கட்சிகளும், விவசாய அமைப்புகளும் போராட்டத்தில் குதித்து இருக்கின்றன. இதனால், தமிழ்நாடு - கர்நாடகா எல்லையான ஓசூர் பகுதியில் பதற்றம் நிலவிவருகிறது.

கர்நாடகாவில் 2028-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வர உள்ளது. எனவே, அதை முன்வைத்தே கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மேகதாது அணை கட்டும் முயற்சியை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய இணை மந்திரி ராஜ் பூஷண் சவுத்ரி, மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக கருத்து கூறியிருப்பதும், பா.ஜ.க. கர்நாடகாவில் தங்களுக்கான ஆதரவை பெருக்கிக்கொள்வதற்கே என்றும் தெரிகிறது.

முந்தைய சந்திப்புகளில் சுமூக முடிவு இல்லை

ஏற்கனவே, காவிரி பிரச்சினை தொடர்பாக, தமிழக முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, கர்நாடகா முதல்-மந்திரிகள் ராமகிருஷ்ண ஹெக்டே, குண்டு ராவ் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறார்.

இதேபோல், 1997-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த ஜே.எச்.பட்டீலை சந்தித்து பேசினார். 2012-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, கர்நாடக முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டரை சந்தித்து பேசினார். ஆனால், இதுபோன்ற சந்திப்புகளில் எந்தவித சுமூகமான முடிவும் எட்டப்படவில்லை.

என்னதான் தீர்வு..?

இதுபோன்ற நிலையில், தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் - கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை சந்தித்து பேசுவதில் சுமூக முடிவு எட்டப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் என்றாலும், இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக அணுகுவதே சரியானதான இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அதற்கு முன்னதாக, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி, அதில் எடுக்கும் முடிவின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டை நாடினால் மட்டுமே மேகதாது அணை கட்டுவதை தடுக்க முடியும். தமிழகத்தின் உரிமையும் பாதுகாக்கப்படும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com