கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் கரை திரும்பினர்

தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்று நாகை மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் கரை திரும்பினர்
Published on

தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்று நாகை மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

மீன்பிடி தடைக்காலம்

நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், செருதூர், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, விழுந்தமாவடி, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை உள்பட பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களில் உள்ள மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு தமிழக கடலோர மாவட்டங்களில் மீன்பிடி தடைக்காலம் ஆண்டுதோறும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

மீன்பிடிக்க சென்றனர்

அதன்படி இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி தொடங்கியது. இந்த மீன்பிடி தடைக்காலம் கடந்த 14-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்தொழில் செய்யும் விசைப்படகு மீனவர்கள் 5 முதல் 7 நாட்கள் வரை படகிலேயே தங்கி மீன்பிடித்து வருவது வழக்கம்.

இதனால் விசைப்படகு மீனவர்கள் தங்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் மீன்பிடிக்க தேவையான மீன்பிடி கருவிகள், ஐஸ் ஆகியவற்றை படகுகளில் எடுத்துச் சென்றனர்.

கரை திரும்பிய மீனவர்கள்

நாகையில் இருந்து மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் சென்றனர். இந்த நிலையில் மீனவர்கள், மீன்களை பிடித்துக்கொண்டு நேற்று கரை திரும்பினர்.

இதில் மீனவர்களின் வலைகளில் வஞ்சிரம், சீலா, கெளுத்தி, செம்மீன், கணவா, இறால், வவ்வால், திருக்கை மற்றும் பாறை உள்ளிட்ட மீன்கள் சிக்கின.

களைகட்டிய துறைமுகம்

மீன்களை மீனவர்கள் படகில் இருந்து தரம் பிரித்து விற்பனைக்காக ஏலக்கூடத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் சுமார் 60 நாட்களாக வெறிச்சோடிக்கிடந்த அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுக ஏலக்கூடம் நேற்று வியாபாரிகளின் கூட்டத்தால் களைகட்டியது.

மேலும் மீன்கள் வாங்க ஏராளமான பொதுமக்களும் மீன் இறங்கு தளத்தில் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது..

ஏமாற்றம்

61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில் எதிர்பார்த்த அளவு மீன்கள் சிக்கவில்லை. இதனால் தாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். பல நாட்களுக்கு பிறகு மீன்கள் வரத்து அதிக அளவில் இருந்ததால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் நேற்று விற்பனையான மீன்களின் விவரம் வருமாறு:-ஒரு கிலோ ஊசி கணவா ரூ.250, ஓட்டு கணவா ரூ.380, ஆக்டோபஸ் கணவா ரூ.300, பாறை ரூ.380, வஞ்சிரம் ரூ.1,100, நெத்திலி ரூ.150, துள்ளு கெண்டை ரூ.100 விற்னை சய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com