

சென்னை,
புதிய வரி விதிப்பால் தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயரும்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அரசுக்கு மதுபானங்கள் விற்பனை மூலம் வருவாய் அதிகம் கிடைத்து வருகிறது. இந்தநிலையில் த.வெ.க. அரசு மதுபான விற்பனையை ஒழுங்குபடுத்தவும், காலி மதுபாட்டில்களை அகற்றுதல் மற்றும் மறுசுழற்சி செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்யவும், மதுவிலக்கு மற்றும் மறுவாழ்வு, மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றுக்காக 'சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி்' எனும் புதிய வரி விதிப்பை கொண்டு வந்துள்ளது.
சட்டசபையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டம், 2006-ல் திருத்தம் செய்து மசோதாவை தாக்கல் செய்தார். இதில் மதுபானங்களின் விற்பனைக்கு கூடுதலாக 'சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி' விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வரி, ஒரு மதுப்பாட்டிலுக்கு அதிகபட்சம் ரூ.20 என நிர்ணயிக்கப்படும். இது ஏற்கனவே உள்ள வாட் வரிக்கு மேலாக வசூலிக்கப்படும். மதுபானத்தின் வகை, அளவு மற்றும் கொள்கலனின் அளவைப் பொறுத்து வரி விகிதம் மாறுபடும்.
இந்தத் திருத்தத்தின் மூலம், சட்டத்தில் புதிய பிரிவு 3 (ஏ) சேர்க்கப்படுகிறது. இதன்படி, தமிழகத்தில் மதுபானம் விற்பனை செய்யும் ஒவ்வொரு வணிகர்களும், அரசு அறிவிக்கும் விற்பனை நிலையிலேயே இந்த வரியை செலுத்த வேண்டும். கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்டு, அரசு அறிவிக்கை வெளியிட்டதும் இந்த புதிய வரி அமலுக்கு வரும். இதன் மூலம் மதுபானங்கள் விலை உயரும். அதேநேரத்தில் டாஸ்மாக்கில் மதுபானங்கள் விலை உயராது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த புதிய வரியால் டாஸ்மாக் மதுபானங்கள் விலை விரைவில் உயரலாம் என்ற நிலை உள்ளது.