நீலக் கம்பளம் விரித்த நீலகிரி.. கூடலூரில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள்

கூடலூர் அருகே ஓவேலி வனப்பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீல நிற குறிஞ்சி மலர்கள் பூத்து உள்ளது.
நீலக் கம்பளம் விரித்த நீலகிரி.. கூடலூரில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள்
Published on

கூடலூர்,

பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்களால் கூடலூர் வனப்பகுதி செல்பி ஸ்பாட்டாக மாறி வருகிறது. குறிஞ்சி மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

குறிஞ்சி மலர்கள்

குறிஞ்சி மலர், தமிழர்களின் பண்பாட்டோடும், இயற்கை வளத்தோடும் நெருங்கிய தொடர்புடைய மலராகும். இது நீல நிறத்தில் பூக்கும். சங்க இலக்கியங்களில் குறிஞ்சி நிலம் என்ற பெயருக்கு இந்த மலரே காரணமாக விளங்குகிறது. குறிஞ்சி மலரின் அறிவியல் பெயர் 'ஸ்டிராபிலாந்தஸ் குந்தியானா' ஆகும். வழக்கமாக நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குறிஞ்சி செடிகள் வளருகிறது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூப்பதால், சிறப்பு வாய்ந்த மலராக மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறது. தற்போது நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடு காணி, ஓவேலி, நடுவட்டம் ஊசிமலை காட்சி முனை வனப்பகுதியில் குறிஞ்சி மலர்கள் பூத்து உள்ளன. மலைகள் முழுவதும் நீல நிற போர்வை போர்த்தியது போல் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்கி காட்சியளிக்கிறது.

செல்பி ஸ்பாட்

இதனால் கூடலூர் சுற்றுவட்டார மக்கள் குறிஞ்சி மலர்களை கண்டு ரசித்து வருகின்றனர். இதேபோல் கேரளம், கர்நாடகா மாநில சுற்றுலா பயணிகளும் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ள தகவல் அறிந்து, அதிக அளவு வர தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊசிமலை காட்சி முனை வனப்பகுதியில் பூத்துள்ள குறிஞ்சி மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். தங்களது செல்போன்களில் குடும்பத்தினருடன் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

இதேபோல் பாண்டியாறு வனப்பகுதியில் குறிஞ்சி மலர்களை கண்டு, அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் அத்துமீறி சென்று செல்பி எடுத்து வருகின்றனர். இதனால் வனப்பகுதி செல்பி ஸ்பாட்டாக மாறி வருகிறது. இதனிடையே காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அச்சுறுத்தல் உள்ள வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் அத்துமீறி செல்பி எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com