பள்ளிக்கரணை சதுப்பு நில சுற்றுச்சுவர் பேரழிவை உண்டாக்கும் - அன்புமணி ராமதாஸ்

நடைபாதை அமைக்கும் திட்டத்தை நிறுத்தவில்லை என்றால், என் தலைமையில் பல போராட்டங்களை நடத்துவேன் என அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
anbumani ramadas interview
Published on: 

சென்னை,

பள்ளிக்கரணையில் கட்டப்படும் சதுப்பு நில சுற்றுச்சுவர் பேரழிவை உண்டாக்கும் என அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையில் சதுப்பு நிலத்தில் நெய்தல் மீட்சி மற்றும் பாதுகாப்பு பணிகள் பெயரில் நடைபாதைகள் அமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று பள்ளிக்கரணையில் ஆய்வு செய்த அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :-

கடந்த திமுக ஆட்சிகாலத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தடுத்து 3 கிமீ நீளத்திற்கு ஒரு நடைபாதை அமைக்கும் திட்டத்திற்காக உலக வங்கியிடம் கடன் பெற்று திட்டத்தை அமைத்தது திமுக. இந்த திட்டத்தை தொடர்ந்து தவெக அரசு நடத்தி வருகிறது. அதாவது, திமுக அரசு நெய்தல் மீட்சி என்ற பெயரில் திட்டம் தொடங்கி 14 கடலோர மாவட்டங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கு ஒரு திட்டத்தை 2024-ம் திமுக அரசு கொண்டு வந்தது.

இதற்கு உலக வங்கியிடம் இருந்து ரூ.1674 கோடி கடன் பெற்று ரூ.21.50 கோடி செலவில் பள்ளிக்கரணையில் தடுப்புச்சுவர் கட்டியது. ஆனால், இது சட்டத்திற்கு எதிரானது பள்ளிக்கரணையில் எந்த சுவரும் கட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த திட்டம் சட்டத்திற்கு எதிரானது என்று பாமக கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான சவுமியா அன்புமணி நேரில் சென்று கண்டனம் தெரிவித்தார்.

ஆனால், அதனை காதில் வாங்கி கொள்ளாமல் தவெக அரசு தொடர்ந்து இந்த திட்டத்தை அதிவேகமாக செய்து வருகிறது. சட்டத்துக்கு விரோதமான இந்த திட்டத்தை தவெக அரசு ஏன் விரைவாக செய்து வருகிறது? பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது சென்னை மக்களுக்கு கருப்பசாமி மாதிரி. சென்னை மக்களுக்கு பாதுகாப்பு இந்த சதுப்பு நிலம். இந்த நிலத்தில் மழைகாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது இதன் வழியாக தான் தண்ணீர் சென்று கடலில் கலக்கிறது.

மழைக்காலத்தில் இந்த நிலத்தில் உறிஞ்சப்படும் நிலத்தடிநீரை வெயில் காலத்தில் மக்கள் குடித்து வாழ்கின்றனர். 100 ஆண்டுகளுக்கு முன்பு 15 ஆயிரம் ஏக்கர் இருந்த இந்த சதுப்பு நிலம் இன்று வெறும் 2,500 ஏக்கர் தான் உள்ளது. திமுக காலத்தில் கொண்டு வந்த எலக்ட்ரானிக் சிட்டி 100 சதவீதம் சதுப்பு நிலத்தில் தான் கட்டப்பட்டுள்ளது. நாங்கள் கட்டும்போது போராடினோம். அப்போது தான் விரிவாக்கத்தை நிறுத்தினார்கள்.

சட்டத்திற்கு எதிரான தடுப்புச்சுவர் சதுப்பு நிலத்தில் கட்டி தண்ணியை நிறுத்தி பில்டிங் காண்ட்ராக்டருக்கு கொடுப்பதற்கு தான் இந்த திட்டம். மிகப்பெரிய ஊழல் திட்டம் இது. இந்த திட்டத்தை தவெக அரசு நிறுத்தவேண்டும். குறிப்பாக, இந்த நடைப்பாதையை உடைத்து எறியனும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டுவதால் சுத்தமான தண்ணீர் எப்படி செல்ல முடியும் ? திமுக தவறு செய்கிறது. தவெகவும் அதை ஏன் செய்கிறது. இந்த நடைபாதை இங்கு தேவையா ? ஊழல் செய்வதற்கு தான் இந்த நடைபாதை.

தமிழக முதல் - அமைச்சர் இந்த திட்டத்தை நிறுத்தி அமைக்கப்பட்ட நடைபாதையை உடைத்து எரிய வேண்டும். அதுவரை நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். இந்த திட்டத்தை நிறுத்தவில்லை என்றால், என் தலைமையில் பல போராட்டங்களை நடத்துவேன். இவ்வாறு அவர் பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com