எதிர்க்கட்சிகள் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகள்.. என்ன சொல்லப்போகிறார் முதல்-அமைச்சர் விஜய்..? - இன்று பதிலுரை

சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் இன்று பதிலுரை வழங்குகிறார்.
சட்டசபையில் விஜய், vijay
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த 18-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தின் முடிவில் 3 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வெள்ளிக்கிழமை அன்று காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராக முதல்-அமைச்சர் விஜய் தனிதீர்மானம் கொண்டுவந்தார்.

கடும் வாக்குவாதம்

அதில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சேர்க்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் கோரிக்கையையும் முதல்-அமைச்சர் ஏற்ற பிறகு தீர்மானம் ஒர்மனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது.

முதல் நாள் தி.மு.க. மற்றும் த.வெ.க. எம்.எல்.ஏக்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் நேற்று மீண்டும் அவை தொடங்கியது. அப்போது புதிய நடுவர் மன்றம் அமைக்கக் கோரியதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தன.

அதேநேரம், திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் ஆலையில் அம்மோனியா வாயு கசிவால் வெளிமாநில ஊழியர்கள் உயிரிழந்தது குறித்து விவாதிக்க வேண்டும் என தி.மு.க. கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால், அந்த விபத்து குறித்து 110 விதியின் கீழ் அரசு சார்பில் விளக்கம் மட்டுமே அளிக்கப்பட்டது.

சட்டசபையில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய எதிர்க்கட்சிகள்

சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியபோது தேசிய கீதம் இரண்டு முறை ஒலிக்கப்பட்டது ஏன்?. அமைச்சரை சந்தோஷப்படுத்தி மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க முயல்கிறீர்களா? . தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் உள்ளது?. சட்ட-ஒழுங்கு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கட்டுக்குள் இல்லாதது ஏன்?

நடுவன் மன்றம் அமலுக்கு வந்தால் புதிய சட்ட சிக்கல்கள் ஏற்படாதா?. பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய த.வெ.க. நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் த.வெ.க. பக்கம் சாய்வது ஏன்? என எதிர்க்கட்சிகள் பல கேள்விகளை அடுக்கி, முதல்-அமைச்சர் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

முதல்-அமைச்சர் விஜய் இன்று பதிலுரை

இந்நிலையில் சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் இன்று பதிலுரை வழங்குகிறார். மேலும் தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக, எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் இன்று விரிவான பதிலளிக்கிறார்

இதனிடையே சட்டசபை கூட்டத்தொடரில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான நேரலை வெள்ளிக்கிழமை அன்று துண்டிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும், நேற்று முழுமையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நேரத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை நோக்கி பல்வேறு உறுப்பினர்களும் நேரடியாக கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்கும் வகையில் தனது உரையை விஜய் இன்று நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com