

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் த.வெ.க. வெற்றி பெற்று, 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. முதல் தேர்தலிலேயே வெற்றி வாகை சூடி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உயர்ந்துள்ளது.
234 தொகுதிகளில் சென்னையில் 16 தொகுதிகள் ஒவ்வொரு கட்சிக்கும் முக்கியமான தொகுதிகளாக பார்க்கப்படும். அந்த வகையில் இதுவரை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இருபெரும் திராவிட கட்சிகள் எப்போதெல்லாம் ஆட்சிக் கட்டிலில் அமருகிறார்களோ? அப்போதெல்லாம் சென்னையின் இந்த 16 தொகுதிகளிலும் அதிக இடங்களை தக்க வைத்து தங்கள் கோட்டை என்பதை நிரூபிப்பார்கள்.
அதன்படி, 2026 சட்டமன்ற தேர்தலில் யார் சென்னையை தங்கள் கோட்டையாக தக்க வைக்கப் போகிறார்கள்? ஏற்கனவே ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க. மீண்டும் கைப்பற்றுமா? அ.தி.மு.க. அதை தட்டிப் பறிக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இடையில் த.வெ.க. சூறாவளி காற்றாக உள்ளே புகுந்தது. அவர்களும் சென்னையில் முத்திரை பதிப்பார்களா? என்ற பேச்சும் எழுந்தது.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்றைய தேர்தல் முடிவு அமைந்தது. இருபெரும் திராவிட கட்சிகள் மாறி மாறி தங்கள் கைவசம் வைத்து இருந்த சென்னை கோட்டையை முதல் தேர்தலிலேயே த.வெ.க.வின் கோட்டையாக விஜய் எனும் ஒற்றை முகம் மாற்றியுள்ளது.
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி (உதயநிதி ஸ்டாலின்), துறைமுகம் (சேகர்பாபு) ஆகிய தொகுதியில் மட்டும் தி.மு.க. வெற்றி பெற்றது. மற்ற தொகுதிகளை த.வெ.க. வாரி சுருட்டிக்கொண்டது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். சென்னை எங்கள் கோட்டை என்பதை விசில் அடித்து உறுதி செய்துவிட்டது.
விஜய் (பெரம்பூர்),
புஸ்சி ஆனந்த் (தியாகராயநகர்),
வி.எஸ்.பாபு (கொளத்தூர்).
ராஜமோகன் (எழும்பூர்),
வி.கே.ராம்குமார் (அண்ணாநகர்),
ஆதவ் அர்ஜூனா (வில்லிவாக்கம்),
ஜே.சி.டி.பிரபாகர் (ஆயிரம் விளக்கு).
எம்.ஆர்.பல்லவி (திரு.வி.க.நகர்),
விஜய் தாமு (ராயபுரம்).
மரிய வில்சன் (ஆர்.கே.நகர்).
ஆர்.குமார் (வேளச்சேரி),
வெங்கடரமணன் (மயிலாப்பூர்),
அருள் பிரகாசம் (சைதாப்பேட்டை),
ஆர்.சபரிநாதன் (விருகம்பாக்கம்).