

சென்னை,
இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டசபை மீண்டும் கூடுகிறது.
தமிழகத்தில் த.வெ.க. தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்த நிலையில், தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 18-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் அர்லேகர், தனது உரையை முழுமையாக நிகழ்த்தி இருந்தார்.
சட்டசபையின் இரண்டாம் நாள் கூட்டத்தில், மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானத்தை, முதல்வர் விஜய் முன்மொழிந்தார். சட்டசபையில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க, தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில், இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டசபை மீண்டும் கூடுகிறது. கவர்னர் உரை மீதான விவாதம் இன்று தொடர்கிறது. முதல்-அமைச்சர் விஜய்யின் பிறந்த நாளும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சட்டசபையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.