சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சகட்டமான திருநெல்வேலி சம்பவம் - வானதி சீனிவாசன் கண்டனம்

தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சகட்டமாக இன்று ஓர் குடும்பமே அழிந்திருக்கிறது.
வானதி சீனிவாசன்
Published on

திருநெல்வேலி,

தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தந்தை மற்றும் அவருடைய 5 வயது மகன் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டதும் மற்றொரு மகன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. அந்த பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்கால கனவுகள் சிதைக்கப்பட்டு இன்று சமூக விரோதிகளின் கொலைப்பசிக்கு ஆளாகி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சகட்டமாக இன்று ஓர் குடும்பமே அழிந்திருக்கிறது. அதுவும் கடந்த சில நாட்களாக பழிக்குப் பழி சம்பவங்கள், முன்விரோத சம்பவங்களால் தமிழகத்தில் இரத்த ஆறு ஓடுவது சட்டம் ஒழுங்கில் தவெக அரசின் நிர்வாகத் தோல்விக்கு மற்றுமோர் இரத்த சாட்சி.

கொடூரக்கொலை

ஆனால் சட்டம் ஒழுங்கினை பாதுகாக்க வேண்டிய காவல்துறையின் அலட்சியப் போக்கால் இன்று சமூக விரோதிகளின் கூடாரங்களாக தென்மாவட்டங்கள் மாறி கொடூரக் கொலைகளை அரங்கேற்றும் இடங்களாக உருவாகியிருப்பது வேதனை அளிக்கக் கூடியது. தினந்தோறும் இத்தனை கொலைகள், குற்றங்கள் நடைபெறுவதை கண்டு சட்டம் ஒழுங்கினை வலுப்படுத்த வேண்டிய முதல்-அமைச்சரோ அதனை விட்டு விட்டு தனது கூட்டணியை வலுப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார். முதல்-அமைச்சர் அவர்களே, அச்சிறுவர்களின் மரண ஓலங்கள் உங்கள் காதுகளில் விழவில்லையா? ஈவு இரக்கமற்ற முறையில் இத்தகையை படுபாதகச் செயலைப் புரிந்த குற்றவாளிகளை விரைவில் கைது செய்து கடும் தண்டனை பெற்றுத் தர காவல்துறையை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com