

சென்னை,
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நேற்று நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் ஆகமங்கள் மீறப்பட்டதாகவும், த.வெ.க. ஆட்சி கலப்பட ஆட்சி என்பதற்கு நேற்று நடைபெற்ற சூரசம்ஹாரமே ஒரு சாட்சி என்றும் முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
“திருச்செந்தூர் திருக்கோவிலின் திருப்பணிக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக அனுமதி நிலுவையில் இருந்த நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகுதான், ரூபாய் 200 கோடி செலவில் HCL நிறுவனத்திற்கு அனுமதி அளித்து திருப்பணிகளை தொடங்கி வைத்தார்.
அதோடு மட்டுமில்லாமல், திருக்கோவிலின் நிதியில் இருந்து ஒரு 200 கோடி ரூபாய் அளவிற்கு செலவு செய்து, 400 கோடி ரூபாய்க்குப் பெருந்திட்டப் பணிகளை நிறைவேற்றி குடமுழுக்கை நடத்தியது தி.மு.க. ஆட்சி. தமிழ் கடவுள் முருகனுக்குப் பெருமைக்குப் பெருமை சேர்த்த ஆட்சி.
முதல் முதலில் திருச்செந்தூரிலே ஆறுபடை வீடுகளையும் வணங்குவதைப் போல், ஐந்து படை வீடுகளை, திருச்செந்தூர் முருகரைத் தவிர்த்து, மூன்றாம் படை வீடைத் தவிர்த்து, ஐந்து படை வீடுகள் திருத்தணி, திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை ஆகிய ஐந்து திருக்கோவில்களையும் அங்கேயே உருவகப்படுத்தி இருக்கின்றோம்.
கூடுதலாக கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியை ஏற்படுத்தி இருக்கின்றோம். வருகின்ற வாகனங்களுக்கு கார் பார்க்கிங், ஆயிரம் வாகனங்கள் வந்தாலும் ஒரே முறையில் பார்க்கிங் செய்வதற்கு உண்டான வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கின்றோம். கிட்டத்தட்ட 48 ஏக்கர் பரப்பளவில் பக்தர்கள் எங்கு வேண்டும் என்றாலும் இளைப்பாறலாம் என்ற ஒரு நிலையை கொண்டு வந்திருக்கின்றோம்.
இந்த ஆட்சிக்கு முன்பு பாங்கு என்று ஒன்று கடைபிடிக்கப்பட்டு வந்தது. திருக்கோவிலிலேயே அந்த சஷ்டி விரத நாட்களில் அங்கேயே தங்கி, அங்கேயே பக்தர்கள் இறைதரிசனம் செய்கின்ற ஒரு சூழ்நிலை இருந்தது. சுகாதாரச் சீர்கேட்டின் அடிப்படையில் நீதிமன்றத்திற்குச் சென்று, நீதிமன்ற உத்தரவுப்படி திருக்கோவிலின் உள்ளே இரவு தங்கக்கூடாது என்ற நடைமுறையைக் கொண்டு வந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.
அந்தத் திருக்கோவிலில் இருக்கின்ற கோபுரங்கள் ஆகட்டும், திருக்கோவிலில் இருக்கின்ற வாகன மண்டபங்கள் ஆகட்டும், திருக்கோவிலில் இருக்கின்ற ஏனைய பிரகார மண்டபங்கள், சூரன் ஜெயந்திநாதர் மண்டபம் ஆகட்டும், அனைத்து பணிகளையும் முழுமையாக நிறைவேற்றிய ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.
அந்தத் திருக்கோவிலில் இருக்கின்ற அன்னதானக் கூடத்தைப் பார்த்தால் திருப்பதிக்கு நிகராக அந்தத் திருக்கோவிலுடைய அன்னதானக் கூடம் இருக்கும். அந்தத் திருக்கோயிலுக்கு முழுநேர அன்னதானத் திட்டத்தைக் கொண்டு வந்த ஆட்சி முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வழிகாட்டுதலோடு நடைபெற்ற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சி.
நேற்றைக்கு நடந்த சூரசம்ஹார விழாவில் முதன்முதலில் சூரசம்ஹார விழாவிற்கு மேடை அமைத்து, ஒலிபெருக்கியின் வாயிலாக முருகனை வர்ணனை செய்த ஆட்சி எங்கள் ஆட்சி. அதற்கு முன்பு கடற்கரையிலே இவ்வளவு காலங்களில் சூரசம்ஹாரத்திற்கு மேடையே அமைக்கப்படவில்லை.
அடுத்து, நேற்று ஆகமங்கள் அதிகப்படியாக மீறப்பட்டிருக்கின்றன. மனிதனை இறைவனுக்கு நிகராக நேற்றுக் கொண்டாடி இருக்கின்றார்கள். ஒரு இடத்தில் பார்த்தால், யார் யாரையோ அழைத்துச் சென்று, அங்கு முருகனுக்கு அரோகரா என்று சொல்வதற்குப் பதிலாக, "முதல்-அமைச்சருக்கு அரோகரா, அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா" என்கிறார் ஒருவர்.
இன்னொருவர் சொல்லுகிறார், வேல் வாங்கி எப்படி முருகன் பாலகனாக இருந்து சூரனை வதம் செய்தாரோ, அதுபோல் வேல் பெற்று வதம் செய்த கடவுள் தமிழக முதல்-அமைச்சர் என்று இன்னொருவர் வர்ணிக்கின்றார். அடுத்து, துறையினுடைய அமைச்சர் வேலையும், சேவல் கொடியையும் இரண்டு கைகளிலே பிடித்துக் கொண்டிருக்கின்றார்.
வேலை வாங்குபவர் சட்டை இல்லாமல் வெறும் உடம்போடுதான் வேலையும், சேவல் கொடியையும் வாங்க வேண்டும். வேலை வாங்குகின்ற ஆகமம் எங்குமே இல்லை. அந்த வேலைப் பிடிப்பதும், வேல் கொண்டு சூரசம்ஹாரம் செய்வதும் அந்தத் திருக்கோவிலுடைய அர்ச்சகர்கள். அந்தத் திருக்கோவிலுக்கு சொந்தமானவர்கள்தான் அந்தப் பணியிலே ஈடுபடுவார்கள்.
ஆனால் இவர் வேலையைக் கையில் பிடித்துக் கொண்டு, சேவலைக் கையிலே பிடித்துக் கொண்டிருக்கின்றார். முழுக்க முழுக்க இது பக்தர்களுக்காக, பக்தர்களின் நன்மைக்காகக் கொண்டாடப்பட்ட சூரசம்ஹார விழா அல்ல. ரீல்ஸ் ஆட்சிக்காக, ரீல்ஸுக்காகவே கொண்டாடப்பட்ட ஒரு சூரசம்ஹார நிகழ்ச்சியாக நேற்றைய நிகழ்ச்சி மாறியிருக்கின்றது.
கனம் நீதிபதிகள் மதிக்கப்படவில்லை. ஆதீனங்கள் மதிக்கப்படவில்லை. முன்வரிசையில் வெறும் அமைச்சர்கள்தான் கொடை சூழ நின்று கொண்டிருந்தார்கள். இது தமிழகத்திற்கும், ஆன்மீகத் தளத்திற்கும், ஆன்மீக உலகிற்கும் மிகப்பெரிய வெட்கக்கேடு. இந்த ஆட்சி ஒரு சாராரை நோக்கிச் செல்லுகின்ற ஆட்சி என்பதற்கு இது ஒரு உதாரணம் என்பதைநான் இங்கு பதிவிடக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
நாங்களும் 5 ஆண்டுகள் அனைத்து திருக்கோவில்களிலும் முருகப் பெருமானுடைய நிகழ்ச்சி ஆகட்டும் அல்லது புரட்டாசியிலே வருகின்ற பெருமாள் நிகழ்ச்சி ஆகட்டும், ஆடியிலே வருகின்ற அம்மன் கோவில் நிகழ்ச்சி ஆகட்டும், ஈஸ்வர நிகழ்ச்சியாகட்டும், மார்கழி மாதத்திலே வருகின்ற நிகழ்ச்சி ஆகட்டும், எங்குமே சமயங்களை மீறவில்லை. எங்குமே ஆகம விதிகளை மீறவில்லை. எங்குமே எங்களுடைய முதல்-அமைச்சரின் புகழ் பாடவில்லை.
எந்த இறையன்பரோ, எந்த இறைக் கடவுளோ, அந்த இறைக் கடவுளுடைய புகழைத்தான் நாங்கள் பாடினோம். இன்னும் பாடிக் கொண்டிருப்போம். ஆன்மீகத்திற்கு எதிரான அரசு என்று சொன்ன அந்த ஆட்சியில் ஆகமம் பின்பற்றப்பட்டது. திருக்கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் முழுமையாகப் போற்றப்பட்டார்கள், மதிக்கப்பட்டார்கள். இந்த ஆட்சி கலப்பட ஆட்சி. அதற்கு நடைபெற்ற சூரசம்ஹாரமே ஒரு சாட்சி.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.