பிழைப்புத் தேடி வந்தவருக்கும் தவெக அரசால் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை - நயினார் நாகேந்திரன்

பொதுமக்களின் பாதுகாப்பை இனியும் அலட்சியம் செய்யக் கூடாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பிழைப்புத் தேடி வந்தவருக்கும் தவெக அரசால் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை - நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”அடையாறு பகுதியில் தவெக நிர்வாகி ஒருவர் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட பதற்றம் தணிவதற்குள், சென்னையை அடுத்த நொளம்பூரில் இலவசமாக பீடி தர மறுத்த புலம்பெயர் தொழிலாளி ஒருவரை, போதையில் இருந்த கும்பல் உயிர் போகும் அளவிற்கு கொடூரமாகத் தாக்கியதாக வெளியாகியுள்ள காணொளி பதைபதைக்கச் செய்கிறது. தலைநகரில் ஒரே நாளில் நடந்த இந்த இரு படுகொலைகளும், தற்போது தமிழகத்தில் நடைபெறும் “ரீல்ஸ்” ஆட்சியின் ரியாலிட்டியை மக்களுக்கு உணர்த்துகிறது.

குறிப்பாக, கிட்டத்தட்ட 35 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை கொண்டுள்ள தமிழகத்தில், தமிழகத்தை சேர்ந்தவருக்கும் பாதுகாப்பில்லை, தமிழகத்திற்கு பிழைப்புத் தேடி வந்தவருக்கும் ஜோசப் விஜய் தலைமையிலான அரசால் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்பது இந்திய அளவில் நமக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தும். நமது மாநிலத்தின் உட்கட்டமைப்பையே கேள்விக்குறியாக்கும்.

ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மக்களிடம் இருந்து தன்னை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் முதல்வர் விஜய், பொதுமக்களின் பாதுகாப்பை இனியும் அலட்சியம் செய்யக் கூடாது.

எனவே, காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீது சட்டமன்றத்தில் இன்று பதிலுரை நிகழ்த்தவிருக்கும் முதல்வர், தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், போதை குற்றங்கள், காவல் மரணங்கள் என இதுவரை 500 - க்கும் மேற்பட்ட கொடூரக் குற்றங்கள் தமிழகத்தில் அரங்கேறியுள்ள அவலத்தைப் பற்றி விளக்கமளிக்க வேண்டும்! சீரழிந்துள்ள சட்டம் ஒழுங்கை சமன்செய்ய தவெக அரசு என்னென்ன செயல்திட்டங்கள் வைத்துள்ளது என்பதையும் சமர்ப்பிக்க வேண்டும்!”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com