

சென்னை,
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்ளிட்ட பிற முக்கியப் பகுதிகளில் தொடர் மின்வெட்டு காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த முறை தமிழகத்தை தவிக்க வைத்த திமுக அரசுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தற்போதைய தவெக அரசும் மக்களை இப்படி வதைப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கொளுத்தும் அக்னி வெயிலில் மின்சாரத்தை துண்டித்து குழந்தைகளையும் முதியவர்களையும் படாதபாடு படுத்துவது தான் தவெக தம்பட்டம் அடித்த மாற்று அரசியலா? ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கூறிவிட்டு, இப்படி மொத்தமாக மாநிலத்தின் மின்சார உபயோகத்தையே தடுத்து நிறுத்துவது அப்பட்டமான ஏமாற்று வேலை.
மேலும், தவெக அரசின் இந்த தொடர் மின்வெட்டால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் முடங்குவதோடு, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. எனவே, தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் கிடைக்க முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமென தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.