மாணவர்களின் கலாச்சார உரிமைகளையும், வழிபாட்டு சுதந்திரத்தையும் நசுக்க நினைக்கும் தவெக அரசு

தமிழக மக்களின் ஆன்மிக வாழ்வியலோடு விளையாட வேண்டாம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

மாணவர்களின் கலாச்சார உரிமைகளையும் அவர்களின் வழிபாட்டு சுதந்திரத்தையும் நசுக்க நினைக்கும் தவெக அரசு!

நேரடி தாக்குதல்

கல்வி வளாகங்களுக்குள் மதம் சார்ந்த அடையாளங்களோடு யாரும் வரக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியிருப்பது, தமிழகத்தின் பாரம்பரிய கலாச்சாரத்தின் மீதும், பண்பாட்டு விழுமியங்கள் மீதும் தொடுக்கப்பட்ட நேரடி தாக்குதலாகும்.

வன்மையாக கண்டிக்கிறேன்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் (பிரிவு 25) ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியுள்ள வழிபாட்டு சுதந்திரம் மற்றும் மத சுதந்திரத்தை முற்றிலும் பறிக்கும் இத்தகைய அறிவிப்பை வன்மையாக கண்டிக்கிறேன்.

எச்சரிக்கை

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, மாணவர்களின் சுய அடையாளங்களை அழிக்கும் கூடாரமாக மாறக்கூடாது. ஆனால், தனது அதிகார மமதையை வெளிப்படுத்த தொடங்கியுள்ள தவெக அரசு, முற்போக்கு என்ற போர்வையில் காலாவதியான நாத்திக கொள்கைகளை இறக்குமதி செய்து, தமிழக மக்களின் ஆன்மிக வாழ்வியலோடு விளையாட வேண்டாம் என எச்சரிக்கிறேன்.

எனவே, மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் இந்த அறிவிப்பைத் தவெக அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும். இல்லையெனில், தமிழக மக்கள் தங்களது கலாசாரத்தை காக்க ஜனநாயக ரீதியில் திரண்டெழுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com