மாரிதாஸ் மீதான தவெக அரசின் கைது நடவடிக்கை அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் - சீமான்

தவெக அரசு பழிவாங்கும் போக்கோடு நடந்துகொள்ளாமல் ஜனநாயகத் தன்மையோடு இயங்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான்
கோப்புப்படம்
Published on

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான தம்பி மாரிதாசை தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தொடர்ச்சியாகத் தோலுரித்து வரும் மாரிதாசைக் கைது செய்திருப்பது அதிகாரத் திமிரின் உச்சமாகும்.

தம்பி மாரிதாசின் கருத்துகள் அவதூறானவை எனக் கருதினால் சட்டப்படியாக வழக்குத் தொடுக்கலாம்; மாறாக, எவ்வித விசாரணையும் இன்றி உடனடி கைது நடவடிக்கை என்பது ஜனநாயக விரோதமாகும். பட்டப்பகலில் படுகொலை செய்வோர், பாலியல் வன்கொடுமை செய்வோர், போதைப்பொருட்கள் விற்பனை செய்கின்ற கொடுங்குற்றவாளிகள் மீதெல்லாம் பாயாத அதிரடி கைது நடவடிக்கைகள், அரசை விமர்சிப்பவர்கள் மீது மட்டும் பாய்கிறது என்றால் இந்த அரசும் அதிகாரமும் யாருக்கானது? இதுதான் மக்கள் வேண்டிய மாற்றமா? ஆளும் தவெகவைச் சேர்ந்தவர்கள் மாற்றுக்கட்சியினரையும், அரசை விமர்சிப்போரையும் தனிநபர் தாக்குதல் தொடுத்து, இணையவெளியில் அவதூறுகளையும், ஆபாசத்தையும் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடும் நிலையில், அவர்கள் மீதெல்லாம் பாயாத சட்டம் தம்பி மாரிதாஸ் மீது பாய்கிறதென்றால், இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் போக்காகும். தவெகவை மற்றவர்கள் விமர்சிப்பதை கவனிக்கும் காவல்துறை, தவெகவினர் மற்றவர்களை விமர்சிப்பதை கண்டுகொள்ளாதது ஏன்?

திருச்சியில் பேசிய முதல்வர் விஜய், ‘என்னை விமர்சிப்பவர்கள் நிறுத்திவிட வேண்டாம், தொடர்ந்து விமர்சியுங்கள்’ என்று மேடையில் வீரவசனம் பேசிவிட்டு, இப்போது அற்ப விமர்சனத்திற்கு அதிரடி கைது நடவடிக்கை எடுப்பதற்கு பெயரென்ன? முந்தைய திமுக அரசு செய்த கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் அதே கொடுஞ்செயலை தவெக அரசும் தொடர்வதற்கு பெயர்தான் தூய சக்தியா? வெட்கக்கேடு! ஆளும் அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரை அச்சுறுத்த முனையும் இத்தகைய மிரட்டல்கள் அப்பட்டமான பாசிசப்போக்காகும். பந்து எப்போதுமே ஒருவரிடம் மட்டுமே இருந்துவிடுவதில்லை. இன்று உங்கள் கைகளில் இருக்கும் பந்து நாளை மற்றவர்கள் கைகளுக்கும் இடம்மாறும்; பார்த்து விளையாடுங்கள்.

ஆகவே, தவெக அரசு பழிவாங்கும் போக்கோடு நடந்துகொள்ளாமல் ஜனநாயகத் தன்மையோடு இயங்க வேண்டுமெனவும், தம்பி மாரிதாசை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com