

நாமக்கல்,
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், நாமக்கலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“சென்னையில் ‘கிளாண்டர்ஸ்’ நோய் பாதிப்பால் குதிரை உயிரிழந்துள்ளது. அது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த நோய்த்தொற்று மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு இல்லை என்பதால் மக்கள் அச்சமடைய தேவையில்லை.
தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் த.வெ.க.வின் உறுதியான நிலைப்பாடு. இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு. ஆனால் இங்கு ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே தேர்வு என்பதை கொண்டு வருவது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் திட்டமாக இருக்கிறது. இது நிச்சயமாக கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தேர்வு நடத்தும்போது, சில இடங்களில் வினாத்தாள் கசிவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம். அடுத்த வருடம் கணினி முறையில் தேர்வு நடத்த இருப்பதாக கூறியுள்ளனர். அப்படி நடத்தினாலும் தேர்வின் மீதான நம்பகத்தன்மை நிச்சயம் குறைந்துவிடும்.
இந்த நீட் தேர்வு தமிழ்நாட்டில் இருக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது, பெரிய சுமையாக இருந்து வருகிறது. எனவே, நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.