

சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
”கிராமப்புற மக்களிடையே நிலவுகிற வேலையில்லா திண்டாட்டத்தை போக்குகின்ற வகையில் அன்னை சோனியா காந்தி அவர்களின் தீவிர முயற்சியின் காரணமாக 2006 ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டம் தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம். ஒரு நிதியாண்டில் 100 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்கி கிராமப்புற மக்களின் குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை உறுதி செய்தது. உலக நாடுகளிடையே மிகப்பெரிய வரவேற்பை இத்திட்டம் பெற்றது. இத்திட்டத்தின்படி, ஆண்டுதோறும் சராசரியாக 5 கோடி குடும்பங்களுக்கு தொடக்கத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதால் அதைப் புறக்கணிக்கிற அணுகுமுறையை கையாண்டது. நிதி ஒதுக்கீடும் குறைக்கப்பட்டது. இருந்தாலும் இத்திட்டத்தை கைவிட முடியாமல் ஏனோதானோ என்று நடைமுறைப்படுத்தி வந்தது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை சீரழிக்கிற நோக்கத்தில் அவரது பெயரை நீக்கியதோடு, வாயில் நுழையாத விபி-ஜி ராம் ஜி என்ற பெயர் மாற்ற நாடகத்தை நடத்தி புதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது. ஆண்டுதோறும் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் இந்த முக்கிய காலகட்டத்திலேயே ஜுலை 31 வரை வெறும் 70.32 கோடி மனித வேலை நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்ட வேலை நாட்களோடு ஒப்பிடுகையில் 34 சதவிகிதமாக இருப்பது அதிர்ச்சி தரக்கூடிய மிகப்பெரிய வீழ்ச்சியாகும். பா.ஜ.க. அரசின் புதிய திட்டத்தின்படி ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 80 சதவிகித நிதி ஒதுக்கீட்டிற்கு பதிலாக 60 சதவிகிதமாக குறைத்து மாநில அரசுகள் மீது மீதமுள்ள 40 சதவிகித நிதிச் சுமையை ஏற்றியிருக்கிறது. இதைவிட மாநில விரோதப் போக்கு வேறு எதுவும் இருக்க முடியாது.
புதிய விதிமுறைகளின் தெளிவற்ற தன்மையால் கிராமப்புற மக்களின் வேலை வாய்ப்புகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், பீகார் ஆகிய பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் மாநிலங்களிலேயே இந்த அவலநிலை உள்ளது. பெயரை மாற்றினால் பெருமை சேராது, ஏழைகளின் வயிற்றில் அடித்தால் பா.ஜ.க.வை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மழை பொழிவு குறைந்து ஏழை, எளிய மக்கள் வேலையில்லா திண்டாட்டத்தில் தவிக்கும் சூழலில் அவர்களது ஒரே வாழ்வாதாரமான வேலை வாய்ப்பையும் பறிப்பது தான் நரேந்திர மோடி அரசின் ‘விக்சித் பாரத்” சாதனையா ? இந்த பேரழிவுக்கு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானும், பிரதமர் மோடியும் நாட்டு மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ? கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை சீரழிக்கும் பா.ஜ.க.வின் நடவடிக்கையை எவராலும் மன்னிக்க முடியாது. அதற்குரிய விலையை நாட்டு மக்கள் நேரம் வழங்கும் போது அளிப்பார்கள்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.