

சென்னை,
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே மக்கள் நலனே முதன்மையாக இருக்க வேண்டும் என முன்னாள் தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
கொள்கைகள் வேறாக இருக்கலாம். கூட்டணிகள் வேறாக இருக்கலாம். ஆனால், தமிழகத்தின் வளர்ச்சி என்று வரும்போது மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் மக்கள் நலனையும், மாநிலத்தின் முன்னேற்றத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
அந்த வகையில் நேற்று சென்னையில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் அரசு நிகழ்ச்சிகள், தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு அளித்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாக அமைந்தன.
மேலும் தமிழகத்தின் மீதான பிரதமரின் அக்கறையும், மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுப்பதில் மத்திய அரசின் பங்களிப்பும் இந்நிகழ்ச்சியின் மூலம் வெளிப்பட்டன.
அதேபோல், தமிழக முதலமைச்சர் தனது உரையில், மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள், நான்கு வழிச்சாலைத் திட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்திற்குத் தேவையான முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பட்டியலிட்டு, பிரதமரிடம் கோரிக்கைகளை முன்வைத்தது வரவேற்கத்தக்கது.
மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை அரசியல் வேறுபாடுகளைக் கடந்து முன்னெடுப்பதும், மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை உரிய முறையில் பரிசீலித்து நிறைவேற்றுவதும் காலத்தின் தேவையாகும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.