டீ குடிப்பதற்காக சென்ற வாலிபர்கள்.. கட்டுப்பாட்டை இழந்த கார்.. நள்ளிரவில் நடந்த கொடூரம்

அவர்கள் சென்ற கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சலையின் இடதுபுறம் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது.
டீ குடிப்பதற்காக சென்ற வாலிபர்கள்.. கட்டுப்பாட்டை இழந்த கார்.. நள்ளிரவில் நடந்த கொடூரம்
Published on

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எருமனூர் புதிய காலனியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு தெருக்கூத்து நடைபெற்றது. இதை அப்பகுதியை சேர்ந்த மக்கள் திரளாக கூடி பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது நள்ளிரவு ஒரு மணியளவில் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் வெங்கடேசன் (வயது 25), தனியார் பள்ளி வாகன ஓட்டுனர். இவரது தம்பி கவுதமன் (20), இவரது நண்பர்களான பாபு மகன் ஆதினேஷ் (21), வீரபாண்டியன் மகன் அய்யப்பன் (19), மணி மகன் வேல்முருகன் (21), பச்சமுத்து மகன் நடராஜன் (21), ஆகிய 6 பேரும் டீ குடிப்பதற்காக காரில் புறப்பட்டு விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் அருகே புறவழிச்சாலைக்கு சென்றனர். காரை வெங்கடேசன் ஓட்டினார்.

ஆனால் அங்கு டீக்கடை இல்லாததால் அங்கிருந்து புறவழிச்சாலை வழியாக சித்தலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கொளஞ்சியப்பர் கோவில் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் சாலையின் இடதுபுறம் உள்ள மரத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கி உருக்குலைந்தது.

இந்த விபத்தில் ஆதினேஷ், அய்யப்பன், வேல்முருகன் ஆகிய 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த வெங்கடேசன், கவுதமன், நடராஜன் ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com