

திருவள்ளூர்,
மப்பேடு ஓசூரம்மன் ஆலய திருவிழாவில், தீமிதித்த பக்தர் ஒருவர் கால் தவறி அக்னி குண்டத்தில் விழுந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திருவள்ளூர் அடுத்த மப்பேடு கிராமத்தில் அமைந்துள்ள ஓசூரம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா கடந்த மாதம் 24ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் சனிக்கிழமை கூழ் ஊற்றுதல் அக்னி சட்டி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் சிகர நிகழ்வான தீமிதித்தல் நேற்று நடைபெற்றது. விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள், சாமி ஊர்வலத்துடன் கரகங்கள் ஏந்தி ஊர்வலமாக வந்து, கோவிலில் முன்பு உள்ள அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து ஓசூரம்மனை தரிசனம் செய்தனர்.
தீ மிதிக்கும்போது முதியவர் ஒருவர் அக்னி குண்டத்தில் கால் தவறி விழுந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் விழா நடத்துபவர்கள் உடனடியாக அவரை மீட்டனர். நெருப்பில் விழுந்ததால் அந்த முதியவருக்கு தோள்பட்டையில் தீக்காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீமிதி திருவிழாவின்போது பக்தர் ஒருவர், அக்னி குண்டத்தில் தவறி விழுந்து காயமடைந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.