

திருவிடந்தை,
திருவிடந்தையில் நடைபெற்று வரும் 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' , திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசியதாவது:-
இதுவரை எந்த முதல்-மந்திரியும் செய்யாத ஒன்றை மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி செய்தார், எஸ்.ஐ.ஆரை கண்டித்து சுப்ரீம்கோர்ட்டு வரை சென்றார், வாக்கு திருடர்களை வெளிப்படையாக விமர்சித்தார். ‘தேர்தல் ஆணையம் திருட்டு ஆணையம்' என கேரளா முதல்-மந்திரி கதறினார்.
நாமும் ஒப்புக்கொள்கிறோம், தேர்தல் ஆணையம் திருட்டு ஆணையம் என்று. ஆனால் தமிழ்நாட்டில் கூச்சல் குழப்பம் இல்லை, வாக்கு திருடர்கள் இருக்கிறார்கள், ஆனால் திருடாமல் பார்த்துக்கொள்ளும் ஒரு தலைவர் இருக்கிறார், அதை தமிழ்நாடுதான் பெற்றிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகதான் இன்று முகவர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார் கழகத் தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
என்.ஆர். இளங்கோ இங்கே வந்து உரையாற்றியிருக்க வேண்டும். ஆனால் வழக்கு ஒன்றின் காரணமாக அவரால் இங்கு வரமுடியவில்லை. இந்தியாவிலேயே எந்த கட்சியும் செய்யாத பணியை, பிஎல்ஏ-2-ஆகிய நீங்கள் செய்திருக்கிறீர்கள். ஒவ்வொரு இல்லமாக சென்று செய்தீர்கள். ஆனால் தேர்தல் ஆணையம் 26.5 லட்சம் பேர் இறந்துவிட்டனர், 3.50 லட்சம் பேர் இரட்டை பதிவு கொண்டவர்களாக இருக்கிறார்கள், 66.5 லட்சம் பேர் இடம்பெயர்ந்தவர்கள் என்று சொல்கிறது.
இதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு உங்கள் தோளில் இருக்கிறது. படிவம் 6-ஐ எப்படி பூர்த்தி செய்ய வேண்டும். தவறாக கொண்டு வந்து சேர்த்தால் படிவம் ஏ-வின்படி எப்படி விளக்க வேண்டும் என்று உங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர நோ மேப்பிங் என்ற வகையில், பெயர் மாற்றம், இனிஷியல் மாற்றம், எழுத்து பிழை என 50 லட்சம் பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் செய்யாத வகையில், சுப்ரீம்கோர்ட்டின் கதவை நாம் தட்டினோம்.
‘நோ மேப்பிங்’ என்று சொல்லப்படுகிற அந்த 50 லட்சம் பேரைச் சேர்ப்பதற்கும், இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்களைச் சரிசெய்வதற்கும்… அரசாங்கம் மட்டும் செய்யக்கூடாது, எங்கள் பி.எல்.ஏ 2 – களையும் வைத்துக்கொண்டுதான் செய்ய வேண்டும் என்று உத்தரவைப் பெற்ற ஒரே இயக்கம் இந்த இயக்கம் தான்.
விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, அன்புக்கரங்கள், கலைஞர் வீட்டு வசதித் திட்டம் என, இதற்காக மட்டுமா இந்த முதல்-அமைச்சர் மீண்டும் வர வேண்டும்.. ஆண்டுக்கு 4 ஆயிரம் மருத்துவ மாணவர்களை, தாழ்த்தப்பட்டவர்களை, பிற்படுத்தப்பட்டவர்களைப் படிப்பதற்கு வழிவகை செய்தாரே, அதற்காகவும் அவர் வர வேண்டும்.
நேரு, அம்பேத்கர், வல்லபாய் பட்டேல் போன்றோர் அரசியல் சட்டத்தை உருவாக்கினர். எத்தனை மதங்கள், எத்தனை ஜாதிகள், எத்தனை மொழிகள் என இத்தனை வேற்றுமைகளையும் ஒற்றுமையாக வைத்து நாம் எப்படி ஆளப்போகிறோம் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் அரசியல் சட்டம்.
அந்த அரசியல் சட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் என அனவருக்கும் உரிமை இருக்கிறது. இந்த உரிமைகளை எல்லாம் பாதுகாப்பதற்கு சட்டமன்றம், நாடாளுமன்றம் இருக்கிறது. நாடாளுமன்றத்தையும், சட்டமன்றத்தையும் உருவாக்குவதற்கு தேர்தல் ஆணையம் இருக்கிறது. இவை தவறு செய்தால், கேள்வி கேட்பதற்கு சுப்ரீம்கோர்ட்டு, ஐகோர்ட்டுகள் உள்ளன.
இத்தனையும் தந்திருக்கக்கூடிய அரசியல் சட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு, ‘ஒரே ஆட்சி, ஒரே மதம், ஒரே மொழி’ என்று கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கிற அமித் ஷாவுக்கும் மோடிக்கும் பதில் சொல்லக்கூடிய, தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் மிக்க ஒரு தத்துவத் தலைவன் இந்தியாவில் இருக்கிறார் என்றால், அது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற இந்த மாமனிதர்தான்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் 2.0 ஆட்சி வரவேண்டும். ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழகம் வெல்லட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.