‘இதைவிட அரசியல் மோசடி ஒன்று இருக்க முடியாது..’ - திட்டவட்டமாக கூறிய வைகோ

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பேசியது குறித்தும், முதல்-அமைச்சர் பேசியது குறித்தும் கருத்து கூற விரும்பவில்லை என வைகோ தெரிவித்தார்.
‘இதைவிட அரசியல் மோசடி ஒன்று இருக்க முடியாது..’ - திட்டவட்டமாக கூறிய வைகோ
Published on

மதுரை,

அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதற்கு தி.மு.க. ஆதரவு கொடுக்க முன்வந்தது உண்மையானால், இதைவிட மிகப்பெரிய அரசியல் மோசடி ஒன்று இருக்க முடியாது என வைகோ விமர்சித்துள்ளார்.

என்னுடைய பயணம்

மதுரையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கும் பணியில், எல்லா கட்சிகளையும் விட முன்னணியில் நிற்பது ம.தி.மு.க.தான். அந்த பணியை நாங்கள் தொடர்ந்து செய்து வருவோம். பொதுநலனுக்காக என்னுடைய பயணங்களை தொடர்ந்து கொண்டே இருப்பேன்.

கருத்து கூற விரும்பவில்லை

முதல்-அமைச்சர் விஜய் குறுகிய நாட்களுக்குள் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டு வருகிறார். இன்னும் 6 மாதங்களுக்குள் தன்னை முழுமையாக அவர் தயார்படுத்திக் கொள்வார். ஆட்சி நடத்தக்கூடிய நிர்வாக நுணுக்கங்களை போகப்போக சில மாதங்களில் அவர் கற்றுத்தேர்ந்து, தெளிவு பெற்றுவிடுவார்.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பேசியது குறித்தும், முதல்-அமைச்சர் பேசியது குறித்தும் நான் கருத்து கூற விரும்பவில்லை. த.வெ.க.வின் மந்திரிசபையில் சேர்ந்துவிட்டோம் என்று சொல்கிறார்கள், ஆனால் தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறோம் என்றும் சொல்கிறார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

அரசியல் மோசடி

அரசியலில் கூட்டணியை விட, மக்கள் நலன்தான் முக்கியம். தி.மு.க.வுடன் கூட்டணியில் இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அறிவித்துவிட்டார்கள். இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் த.வெ.க. அரசுக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதற்கு தி.மு.க. ஆதரவு கொடுக்க முன்வந்தது உண்மையானால், இதைவிட மிகப்பெரிய அரசியல் மோசடி ஒன்று இருக்க முடியாது.”

இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com