தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இதுவரை நடந்ததில்லை, இனியும் இல்லை - தம்பிதுரை பேட்டி


தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இதுவரை நடந்ததில்லை, இனியும் இல்லை - தம்பிதுரை பேட்டி
x
தினத்தந்தி 17 April 2025 11:24 AM IST (Updated: 17 April 2025 11:43 AM IST)
t-max-icont-min-icon

கூட்டணி ஆட்சிக்கு தமிழ்நாட்டில் வாய்ப்பே இல்லை என்று அதிமுக எம்.பி. தம்பிதுரை திட்டவட்டமாக கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியை அமைக்க அ.தி.மு.க. வும், பா.ஜனதாவும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்தநிலையில், சட்டமன்ற தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னரே அ.தி.மு.க.வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக கடந்த 10-ந்தேதி இரவு சென்னை வந்தார் மத்திய மந்திரி அமித்ஷா. கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அவர், 11-ந்தேதியன்று ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்கு சென்று, தேர்தல் வியூகம் பற்றி ஆலோசித்தார். அன்று மாலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முக்கிய நிர்வாகிகளுடன் சென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்தார்.

இதன் பின்னர் பேட்டியளித்த அமித்ஷா, அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியை உறுதி செய்தார். அப்போது தமிழகத்தில் 2026 தேர்தலுக்கு பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும் என்றார். அப்போது எடப்பாடி பழனிசாமியும் உடன் இருந்தார்.

இதனால் தேர்தலுக்கு பின்னர் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி அரசு அமையும் என்று கடந்த 5 நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டது. இந்தநிலையில் மத்திய மந்திரி அமித்ஷாவின் கருத்துக்கு முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். தி.மு.க.வை வீழ்த்தவே பா.ஜனதாவுடன் கைகோர்த்தோம். அதே நேரம் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறினார்.

இந்தநிலையில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒட்டி, கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக எம்.பி,. தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், கருப்பணன், வளர்மதி உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செய்தனர். இதனை தொடர்ந்து அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா கூறியிருந்த நிலையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை சென்னை கிண்டியில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராக அதிமுக வாக்களித்துள்ளது. அதிமுக, இஸ்லாமியர்கள் இடையே ஒரு நல்ல உறவு உள்ளது. திடீரென இந்த கூட்டணி அமையவில்லை. பொதுக்குழு, செயற்குழுவை கூட்டிதான் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2026இல் இபிஎஸ் தனியாகத்தான் ஆட்சி நடத்துவார். கூட்டணி ஆட்சி கிடையாது. காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். என யாரும் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லை. இதுவரை நடந்த எந்த தேர்தலிலாவது கூட்டணி ஆட்சி தமிழகத்தில் நடந்திருக்கிறதா? தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி நடந்ததில்லை, இனியும் நடக்க போவதில்லை. கூட்டணி ஆட்சிக்கு தமிழ்நாட்டில் வாய்ப்பே இல்லை. என்.டி.ஏ வென்றால் அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும் என்றார்.

1 More update

Next Story