‘திருச்செந்தூர் முருகன் கோவிலில் கட்டண உயர்வு இல்லை’ - அமைச்சர் ரமேஷ் விளக்கம்

பொதுமக்களிடம் கருத்துதான் கேட்கப்பட்டதே தவிர, கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
‘திருச்செந்தூர் முருகன் கோவிலில் கட்டண உயர்வு இல்லை’ - அமைச்சர் ரமேஷ் விளக்கம்
Published on

தூத்துக்குடி,

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம் உள்பட அனைத்து கட்டணங்களும் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், கட்டண உயர்வு எதுவும் இல்லை என அமைச்சர் ரமேஷ் விளக்கமளித்துள்ளார்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

“தமிழ்நாட்டில் எங்கெல்லாம் திருக்கோவில்களில் கும்பாபிஷேகம் செய்யப்படாமல் இருக்கிறதோ அங்கெல்லாம் கும்பாபிஷேகம் செய்வதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதேபோல், எங்கெல்லாம் கோவில்கள் கண்டுகொள்ளப்படாமல் இடிந்த நிலையில் இருக்கிறதோ, அந்த கோவில்களை எல்லாம் முதல்-அமைச்சர் விஜய்யின் ஆட்சியில் சீரமைத்து, கும்பாபிஷேகம் நடத்தி, வழிபாட்டிற்கு கொண்டு வருவோம்.

தமிழ்நாட்டு மக்களும், பக்தர்களும் மகிழ்ச்சி பெறும் அளவிற்கு முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் இருக்கும். திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசன கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை. அங்கு 20-க்கும் மேற்பட்ட சேவைகள் இருக்கின்றன. அந்த சேவைகள் அனைத்தும் பழைய கட்டணத்திலேயே நீடிக்கின்றன.

நிர்வாக ரீதியாக சில முறைகேடுகள் அங்கு இருப்பது தெரியவந்தது. அதனை சரிசெய்ய ஏற்கனவே கட்டண உயர்வை அதிகாரிகள் பரிசீலித்து வைத்திருந்தனர். அதற்காக பொதுமக்களிடம் கருத்துதான் கேட்கப்பட்டதே தவிர, கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை. பொதுமக்கள் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று சொன்னால் நாங்கள் உயர்த்தப்போவது இல்லை. பொதுமக்களின் கருத்தை மீறி இந்த அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுக்காது. பொதுமக்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படிதான் இந்த அரசாங்கம் நடக்கும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com