

சென்னை,
யார் யாரை வேண்டுமானாலும் வெட்டலாம், குத்தலாம் என்ற ரீதியில், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை தவெக அரசு சீர்குலைத்து வைத்துள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே, தவறை தட்டிக் கேட்கச் சென்ற காவல் ஆய்வாளரை மதுபோதையில் இருந்த ஆசாமி அரிவாளால் வெட்டிய சம்பவத்தின் பதற்றம் தணிவதற்குள்ளேயே, ராமநாதபுரம் மாவட்டத்தின் பாஜக மாவட்டத் துணைத் தலைவர் சூரங்கோட்டை முத்துசாமி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள கொடூரம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜகவின் நிர்வாகி, விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
"Reels" முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் அவல ஆட்சியில், காவல்துறை அதிகாரிகளுக்கும், அரசியல் கட்சி பிரமுகர்களுக்குமே சரியான பாதுகாப்பு இல்லை என்றால், தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் வசிக்கும் பாமர மக்களின் நிலையை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது. யார் யாரை வேண்டுமானாலும் வெட்டலாம், குத்தலாம் என்ற ரீதியில், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வைத்துள்ள திறனற்ற தவெக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.
தேர்தலின் போது, "மாற்றம்” என்று மார்தட்டிய ஜோசப் விஜய் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றதில் இருந்து, குற்றவாளிகள் கொழுப்பெடுத்துப் போய் திரிகிறார்கள். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து மக்களும் உயிர் பயத்தில் அஞ்சி வாழ்கிறார்கள்.
கடந்த 150 நாட்களில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 200-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளன. கொலைக் குற்றங்கள் 150-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளன. போதைப்பொருள் தொடர்பான குற்றங்களும் 150 -க்கும் அதிகமாக அதிகரித்துள்ளன. இவற்றையெல்லாம் பார்க்கையில், தமிழகத்தினை "தவறான" தலைமையின் கைகளில் ஒப்படைத்து விட்டோமோ என்ற எண்ணம் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டிருக்கிறது.
எனவே, ஏற்கனவே தேர்தலில் வெற்றி பெற்ற, மற்ற கட்சி எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்குவதிலும், அவர்களை ராஜினாமா செய்ய வைத்து மீண்டும் இடைத்தேர்தலில் வெற்றி பெறச் செய்வதிலும் அதீத ஆர்வம் காட்டும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கிலும் சற்று கவனம் செலுத்த வேண்டும்!
தேர்தலில் வெற்றி பெறுவதை விட, நம்பி வாக்களித்த மக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பொறுப்பாக பாதுகாப்பது தான் ஒரு நல்ல ஆட்சியாளருக்கு அழகு என்பதை உணர்ந்து, தமிழகத்தின் பாதுகாப்பை முதல்-அமைச்சர் உறுதி செய்ய வேண்டும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.