

சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
"மாற்று" சக்தி தவெக ஆட்சி பொறுப்பேற்ற பின்னும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், நேற்று திருச்சி மாவட்டம் கீழப்புலிவார்ரோடு பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 17 வயது சிறுமி ஒருவரும் கடத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதிலும், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லும் போர்வையில், இரண்டு நாட்களுக்கு முன் முதல்-அமைச்சர் விஜய் வெற்று விளம்பர உரையாற்றிய அதே திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் சிறுமி கடத்தப்பட்டுள்ள சம்பவம், தவெக அரசின் நிர்வாகத் திறனை கேள்விக்குறியாக்குகிறது.
சின்னஞ்சிறு சிறுமிகளின் பாதுகாப்பைக் கைகழுவி விட்டு, கேமராவைக் கண்டதும் சிங்கம் போல முழங்குவதால் எந்தப் பயனும் இல்லை! எனவே, தமிழக முதல்-அமைச்சர் சட்டம் ஒழுங்கை சரிவரப் பேணி, உடனடியாக தமிழக பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.