“அரசியலில் பெரும்பான்மை - சிறுபான்மை என்ற பேதம் இருக்கக்கூடாது” - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

பாதுகாப்புக் கொடுப்பதுதான் அரசியலா? அதிகாரத்தைக் கொடுப்பதுதான் உண்மையான சமத்துவ அரசியல்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
Published on

சென்னை,

அதாயி கல்விக் குழுமம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட மீலாதுன் நபி விழா மற்றும் சமய நல்லிணக்க மாநாட்டில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், உலகிற்கு நபிகள் நாயகம் வழங்கிய முக்கிய செய்தி அன்பு, கருணை மற்றும் நம்பிக்கை எனக் குறிப்பிட்டார். இதுதொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசி இருப்பதாவது:-

மீலாது நபி வாழ்த்து

எல்லோருக்கும் என்னுடைய மீலாது நபி வாழ்த்துகள். ஒவ்வொரு மனிதனும் பிறக்கிறார்கள்; வாழ்கிறார்கள். சிலர் தன் குடும்பத்திற்காக வாழ்கிறார்கள்; சிலர் ஊருக்காக வாழ்கிறார்கள். சிலர் மட்டும்தான் மக்களுக்காக வாழ்ந்தவர்கள். அப்படி மனிதராகப் பிறந்து இறைத்தூதராக வாழ்ந்து ஒரு சமுகத்திற்கு மட்டுமல்ல... உலகத்திற்கே செய்தியைக் கொடுத்துவிட்டுப் போவார்கள். அப்படிப்பட்ட ஒரு இறைத் தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் இன்று. நபிகள் நாயகம் இந்த உலகத்திற்கு கொடுத்த செய்தி அன்பும் கருணையும் நம்பிக்கையும் தான் அதனால்தான் அவர் இறைத்தூதர்.

இஸ்லாமிய மார்க்கம்

எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் உண்டு. அவர்கள்தான் இந்த மார்க்கத்தைப் பற்றி எனக்கு நிறைய அறிவைக் கொடுத்தார்கள். அதில் முக்கியமானவர், உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்ற நீதியரசர் அக்பர் அலி சார், அவர்தான் இஸ்லாமிய மார்க்கம் பற்றி எனக்கு நிறைய சொன்னவர்.

நபிகள் நாயகம் பிறந்த நல்ல நாளில்... ஒரு சந்தோஷமான - மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத்தின் கனவு 60 வருடம் கழித்து நிறைவேறி உள்ளது. அது சாதரண கனவு அல்ல. அம்பேத்கர் சொல்வார், ஒரு உண்மையான விடுதலை யாதெனில், பிறப்பால் ஒருவருடைய உயர்வை நிர்ணயம் செய்யக்கூடாது. ஒரு சாதியில் பிறந்தால், இந்த இடத்தில்தான் இருக்க வேண்டும்; இவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும்; இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை தீர்மானிக்கக்கூடாது.

அம்பேத்கர்

அதனால்தான், அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிய அம்பேத்கர், இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்று சொன்னார். அதுபோல், சாதி சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்றார். எல்லோரும் சமம் என்ற கோட்பாட்டை முன்வைத்து அரசியலமைப்பை எழுதினார். அண்ணா சொன்னதுபோல், சிறுபான்மை சமூகம், இஸ்லாமிய சமூகம்-கிறிஸ்தவ சமூகம்.

2026 தேர்தலின் வெற்றி, எங்கள் தலைவர் விஜயின் வெற்றி சாதரண வெற்றி அல்ல. பெண்களாலும், இளைஞர்களாலும் உருவாக்கப்பட்ட வெற்றி என்பதை நான் திரும்பத் திரும்ப பதிவு செய்வேன். அதோடு நாங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு வேலூர், ராணிப்பேட்டை வழியாக வரும்போது, இஸ்லாமிய சகோதரிகள் வரிசையாக நின்று வரவேற்பு கொடுத்தனர். அப்போது பலர் நம்பவில்லை. தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுமா? என்று. இந்த மாற்றத்தை கொண்டுவந்ததில் இஸ்லாமிய சகோதர சகோதரிகள், இளைஞர்கள் இந்த மாற்றத்தைக் கொண்டுவந்தனர்.

இந்த மாற்றத்தின் மூலம் அம்பேத்கர் கண்ட கனவு நிறைவேறி உள்ளது. பெரியார் கண்ட கனவு நிறைவேறி உள்ளது. எங்கள் தலைவர் தேர்தல் பிரச்சாரம் போன போதெல்லலாம் விஜய்... விஜய் என்றுதான் சொல்வார்கள்... எழுதுவார்கள்... ஆனால், அவர் வேட்பாளரை அறிவித்தபோது, பெரம்பூர் ஜோசப் விஜய் என்று தைரியமாக அறிவித்தார். அதில் உள்ள செய்தி என்னவென்றால், இந்தியாவின் மதச்சார்பற்ற கொள்கை இந்தியாவில் சவாலாக இருக்கும் நேரத்தில், நான் பிறப்பால் கிறிஸ்தவன் என்றாலும், வளர்ப்பால் அனைவருக்குமானவன். எல்லா மக்களுக்குமானவன் என்பதுதான் அவர் கொடுத்த செய்தி.

2026 தேர்தல் சாதித்த மிகப்பெரிய வெற்றி என்னவென்றால், இந்த முறை வாக்களித்த தமிழக மக்கள் முதல்-அமைச்சர் முதல் அனைத்து வேட்பாளர்களையும் எந்த மதம் என்று பார்க்கவில்லை; எந்த சாதி என்று பார்க்கவில்லை. எந்தப் பாகுபாடும் இன்றி வாக்களித்து மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். அதுவும் குறிப்பாக பெண்கள் அந்த மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். அதுதான் இந்தத் தேர்தலின் மிகப்பெரிய வெற்றி.

அரசியலில் பெரும்பான்மை-சிறுபான்மை என்பது இருக்கக்கூடாது. அனைவரும் சமம் என்ற நிலை ஏற்பட வேண்டும் என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் நோக்கம். கடந்த 60 ஆண்டுகளாக பொதுவாக அரசியலில், இஸ்லாமியர்களுக்கு நாங்கள்தான் பாதுகாப்பு என்று பல கட்சிகள் சொல்வார்கள். அதில் எனக்கு ஒரு கேள்வி உண்டு. பாதுகாப்புக் கொடுப்பதுதான் அரசியலா? அதிகாரத்தைக் கொடுப்பதுதான் உண்மையான சமத்துவ அரசியல்.

ஏ.பி.ஜே. அப்துல்கலாம்

ஏ.பி.ஜே. அப்துல்கலாமை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் இஸ்லாமிய சமூகத்தில் பிறந்தவர். தமிழ் வழிப்பள்ளியில் படித்து, அக்னி ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி, நியூக்ளியர் சோதனையில் இந்தியாவை வெற்றியடைய வைத்தவர். இந்தியாவின் பாதுகாப்பு அந்த நியூக்ளியர் அணு சக்திதான். அப்படி இந்தியாவின் பாதுகாப்பை உருவாக்கியவர் ஒரு இஸ்லாமியர். அவருடைய அக்னி சிறகுகள் புத்தகத்தைப் படித்து வளர்ந்தவன்தான் நான்.

காயிதே மில்லத்தின் செய்தி... மிலாது நபியின் செய்தி... நபிகள் நாயகத்தின் செய்தி... நன்றாகப் படிப்போம்... விளையாட்டுத்துறையில் சாதிப்போம்.. பொருளாதாரத்தில் மிகப்பெரிய வலிமையான இடத்திற்கு வரவேண்டும். ஒரு சாதரண குடிசை வீட்டில் இருந்து கோட்டைக்கு வர வேண்டும். அப்படி வருவதுதான் உண்மையான அரசியல் வெற்றி. அப்படி வருபவர்களால்தான் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

அமைச்சரவை

ஐ.யூ.எம்.எல் தலைவர்கள் எங்களிடம் அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று கேட்கவே இல்லை. அவ்வளவு நல்லவர்களாக இருந்தார்கள், அப்படி இருக்கக்கூடாது. நம் அதிகாரத்திற்காக நாம்தான் முயற்சிக்க வேண்டும். ஏனென்றால், அப்படி நம்மில் ஒருவர் பெறும் அதிகாரம், அது அவருக்கான அதிகாரம் மட்டுமல்ல; அது அவருடைய குடும்பத்திற்கான அதிகாரம் கிடையாது. அது ஒட்டுமொத்த சமூகத்திற்கான அதிகாரம். இந்த அதிகாரம்தான் எதிர்காலத் தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும். நாமும் படிக்க வேண்டும். உயர வேண்டும்; சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் வரும். எங்களுக்கு வேண்டும் என்று கேட்கும் என்ற நிலை மாறி, எங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நாமே உருவாக்கும் சட்டமன்றம் - நாடாளுமன்ற பிரதிநிதிகளை உருவாக்க வேண்டும். அந்த அதிகாரம்தான், நமக்கு பொருளாதார சுதந்திரத்தை உருவாக்கும்.

நான் ஏழையாக இருந்தேன். என் அம்மா 5 வயதில் இறந்துவிட்டார். தற்கொலை செய்து கொண்டு என் கண் முன்னால் இறந்துவிட்டார். அப்பா இல்லை. 15 வயதில் அரசியல் படிக்கும்போது, எனக்கு ஒரு கேள்வி எழுந்தது. ஏன் என் அம்மா இறந்தார்? என்ற கேள்வி எழுந்தது. அதற்கான காரணம், என் அம்மா ஒரு ஏழை விவசாயி. அப்போது முடிவு செய்தேன். என்னிடம் அதிகாரம் வரும் போது, எந்த ஊழலும் இருக்கக்கூடாது என்று நினைத்தேன். அதை நினைத்துத்தான் ஒவ்வொரு நாளும் கையெழுத்துப்போடுகிறேன். அதுபோல், நீங்கள் அனைவரும், உங்கள் பிரச்சினைகளை தீர்க்கம் கையெழுத்தைப் போடும் அதிகாரத்திற்கு வர வேண்டும்.

அரசியலமைப்பு

அம்பேத்கர் சொல்வார், எந்த இடத்தில் புறக்கணிக்கப்பட்டோமோ, அந்த இடத்தில் உங்கள் உழைப்பால் உயர்ந்து நிற்க வேண்டும் என்று. அவர் அப்படித்தான் உயர்ந்து நின்றார். அவர் படித்த இடங்களில் எல்லாம் ஒதுக்கப்பட்டாரோ... பிறகு அவருடைய அரசியலமைப்புதான் அந்த இடங்களில் எல்லாம் நின்றது. இன்றைக்கு இந்தியாவின் பெரிய சட்ட மேதைகள் எல்லாம், அந்த அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பைத்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதைத்தான் எங்கள் கட்சியில் உள்ள தாஹிரா அக்கா சாதித்தார். தைரியமாக அவர் வீட்டில் இருந்து வெளியே வந்து, பொதுவாழ்வில் ஈடுபட்டு, தைரியமாக செயல்பட்டு, பெரிய பெரிய அமைச்சர் வேட்பார்களை எல்லாம் தேர்தலில் தோற்கடித்து வெற்றி பெற்று, இன்று சட்டமன்றத்தில் தைரியமாக நின்று பேசுகிறார். அதைத்தான் நீங்கள் அனைவரும் செய்ய வேண்டும்.

என் அம்மா கொஞ்சம் இதுபோல் தைரியமாக இருந்திருந்தால், அப்படி தற்கொலை செய்து கொண்டிருக்கமாட்டார். ஆனால், தைரியமாக இருந்த என் பெரியம்மா... நான் படிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த என் பெரியம்மா, படித்து முதல் ஐ.பி.எஸ் அதிகாரியானர். அவர்தான் திலகவதி ஐ.பி.எஸ். அதுபோல், நீங்களும் சுதந்திரமாக செயல்பட்டு... தைரியமாக படித்து முன்னேறி சாதிக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com