சிறையில் சப்பாத்தி கொடுக்கின்றனர்.. சாப்பிட முடியவில்லை: அன்பில் மகேஷ் வாதம்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் சப்பாத்தி கொடுக்கின்றனர்.. சாப்பிட முடியவில்லை: அன்பில் மகேஷ் வாதம்
Published on: 

சென்னை,

சிறையில் சப்பாத்தி கொடுக்கின்றனர்.. என்னால் சாப்பிட முடியவில்லை என நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் தரப்பு வாதிட்டுள்ளது.

அன்பில் மகேஷ் கைது

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.400 கோடி அளவுக்கு முறைகேடாக பணம் வசூலித்தது தொடர்பான வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல் வகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதேபோன்று தனது இல்லத்தில் நடந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட மின் னணு சாதனங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

போலீஸ் காவல்...

இந்த மனுக்களுக்கு பதிலளிக்க போலீசார் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து, விசாரணையை 2-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி சத்தி யமூர்த்தி உத்தரவிட்டார். அன்பில் மகேஷ் பொய்யாமொழியை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த இதே சிறப்பு கோர்ட்டு,இதுதொடர்பாக அன்பில் மகேஷ் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது புழல் சிறையில் இருந்து அன்பில் மகேஷ் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில்,

சப்பாத்தி கொடுக்கின்றனர்...

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் புழல் சிறையில் முறையான உணவு தரப்படவில்லை; மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் சப்பாத்தி மட்டுமே சிறையில் உணவாக வழங்கப்படுகிறது. புழல் சிறையில் முறையான உணவு வழங்கப்படாததால் 2-4 கிலோ உடல் எடை குறைந்துவிட்டது; மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் சப்பாத்தியை என்னால் சாப்பிட முடியவில்லை; புழல் சிறையில் எனது வீட்டில் தயாரிக்கப்படும் உணவை வழங்க வேண்டும். தூங்கும்போது கூட விளக்கை எரியவிடுகின்றனர்.

மாநில நலனுக்காக நானும் எனது குடும்பமும் ரத்தத்தையும் வியர்வையும் அளித்துள்ளோம். எனது அதிகாரத்தை வைத்து நான் தப்பவில்லை ஆனால் நான் முத்துக்குமாரை தப்பிக்க வைத்ததாக கூறுகிறார்கள். நான் எங்கும் ஓடி விடமாட்டேன்; காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறேன். மும்பை தாக்குதல் வழக்கில் கைதான அஜ்மல் கசாப்க்குகூட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன.

சுதந்திரமான விசாரணை...

கடந்த மாதம் 18-ம் தேதி அன்பில் மகேஷிடம் சுமார் எட்டு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும் என்பது ஊழலுக்கு வழி வகுக்கும். எனவே 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்ற வேண்டுமென அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.

பல்வேறு துறைகள் ஆலோசித்துதான் 20 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டது. நியாயமான சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார். மேலும் அன்பில் மகேசுக்கு போலீஸ் கஸ்டடி கொடுக்க கூடாது என கோரிக்கை வைத்தனர்.

அன்பில் மகேஷுக்கு உரிய மருத்துவ வசதி செய்து தரப்படும் என்றும் சிறையில் வீட்டு உணவு வழங்குவது பற்றி மட்டும் ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

X