பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
Published on

திருக்கல்யாண உற்சவம்

பெரம்பலூரில் பிரசித்தி பெற்ற அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாசி மகப் பெருந்திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி சுவாமி ஒவ்வொரு நாளும் இரவில் சிம்மம், சேஷம், சூரியபிரபை, சந்திரபிரபை, யானை உள்ளிட்ட வாகனத்தில் திருவீதி உலா வந்தார். நேற்று 7-ம் திருவிழாவை முன்னிட்டு கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இதையொட்டி நேற்று இரவு 7 மணியளவில் சந்திரசேகர சுவாமிக்கும், ஆனந்தவள்ளி தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து புஷ்ப விமானத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.

தேரோட்டம்

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கைலாச வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (திங்கட்கிழமை) காலை நடைபெறவுள்ளது. இதில் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் தர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று காலை தேரோட்டத்திற்கான முகூர்த்த கால் நடப்பட்டது. வருகிற 10-ந்தேதி மஞ்சள் நீர் விடையாற்றி உற்சவத்துடன் மாசி மக பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கோவில் திருப்பணியாளர்கள் செய்துள்ளனர்.

முன்னதாக மாசி மாத 2-வது சனி பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்திகேஸ்வரருக்கு நேற்று காலை பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com