

மதுரை,
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதற்கு, மாநில உரிமைகளை தவெக அரசு எரித்துச் சாம்பலாக்கி இருப்பதாக தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. கடந்த 24-ந்தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று கல்தூணில் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்திருந்தது.
ஆனால், வழக்கமான இடமான உச்சிப்பிள்ளையார் மண்டபத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை கடந்த 27-ந்தேதி விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதன்படி, இன்று மாலை 5 மணியளவில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் பாதுகாப்புடன் தீபம் ஏற்றப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், வி. பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் கோவில் பட்டர்கள் தீபத்தை ஏற்றினர்.
இதற்கிடையே, நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மதுரை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் டிசம்பர் 15-ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் கல்தூணில் தீபம் ஏற்றப்பட்டதற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பதிவில், "பேரறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் திராவிட இயக்கம் தொடர்ந்து காத்து வந்த மாநில உரிமைகளை, இன்று எரித்துச் சாம்பலாக்கி இருக்கிறது தவெக அரசு" என்று குறிப்பிட்டுள்ளார்.