திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

மதுரை ஐகோர்ட்டில் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
Published on

மதுரை,

திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியர்கள் கந்தூரி (ஆடு, கோழிகள் பலி) கொடுக்க கூடாது என இந்து முன்னணி சார்பில் சில மாதங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பக்தர்கள் வழிபடவே பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதேபோல் மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழியுடன் ஏறக்கூடாது என்று போலீஸ் தரப்பில் உத்தரவிடப்பட்டது. இதனிடையே இந்து மக்கள் கட்சி சார்பில் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

அதில், "திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களை பலியிடுவதற்கும், சமைத்து பரிமாறுவதற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை, சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு தடை விதிக்க கோரியும், சிக்கந்தர் பாதுஷா தர்கா புதுப்பிக்கும் பணிக்கு காவல்துறை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன

இந்த மனுக்கள் நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோரின் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், ''கடவுள்கள் சரியாகவே இருக்கிறார்கள். சில மனிதர்களே சரியாக இல்லை'' என்று கருத்து தெரிவித்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று மீண்டும் வந்த போது, நீதிபதி நிஷா பானு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார். ஆனால் நீதிபதி ஸ்ரீமதி வழக்கின் விசாரணை கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்படுவதாக மாறுபட்ட தீர்ப்பை அளித்தார். இதையடுத்து இந்த வழக்கு கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிப்பதற்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com