திருப்பரங்குன்றம் விவகாரம்; திமுக பாதையில் சென்றால் தவெகவுக்கும் அதே கதிதான்- தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில் தமிழக வெற்றி கழக அரசுக்கு கடும் கண்டனம் திமுக பாதையில் சென்றால் தவெகவுக்கும் அதே நிலை ஏற்படும் என்று பா.ஜ.க மூத்ததலைவர்களில ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன்தெரிவித்தார்
தமிழிசை சவுந்தரராஜன்
Published on: 

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் முருகன்கோவிலுக்கு பா.ஜ.க.மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தர்ராஜன் வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; முருகனை தரிசிக்க வந்திருக்கிறோம். முருகன் ஆசிர்வாதம் இருப்பதால்தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு முடியவில்லை என்றாலும் கூட தற்காலிக தீர்வாக 24ஆம் தேதி கார்த்திகை தீபத்தன்று விளக்கேற்றிக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்திருக்கிறார்கள். உயர்நீதிமன்றமும் அனுமதி கொடுத்தது. உச்சநீதிமன்றம் இடைக்கால தடை என்று சொன்னாலும் கூட தீபத்திற்கு ஒரு நாள் அனுமதி கொடுத்திருக்கிறார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பில் தமிழக அரசுக்கு எந்த வேலையும் கிடையாது. இது நிரந்தர தீர்வு இல்லை உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த நாளை, நட்சத்திரத்தை, உணர்வை மதித்திருக்கிறார்கள்.

விஜய் பதில் சொல்ல வேண்டும்

இந்துக்களுக்கு நாங்கள் எதிராக இருக்கிறோம் என்று வாக்கு வங்கிக்காக சொல்ல வேண்டும் என்று அரசியல் ஆய்வு செய்கிறோம் என்று சிறுபான்மையினரை ஏமாற்றுகிறார்கள். பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் இருவரையும் தமிழக வெற்றிக்கழக அரசு ஏமாற்றுகிறார்கள். உங்களுக்கு நிர்மல் குமார் பதில் தேவையில்லை. முதல்வர் விஜயின் பதில் வேண்டும். இந்துக்களின் உணர்வை மதிக்கிறீர்களா இல்லையா என்ற பதில் வேண்டும்.

மேல்முறையீடு செய்ய முடியாது

தமிழக அரசு உயர் நீதிமன்றத்தையும் மதிக்கவில்லை, உச்ச நீதிமன்றத்தையும் மதிக்கவில்லை. புறக்கணிக்கப்படுபவர்களுக்கு கடைசி தீர்வு நீதிமன்றம் தான். ஆனால் அந்த நீதிமன்ற உத்தரவை கூட மதிக்க மாட்டேன் என்று சொல்வது இந்துக்களை எவ்வளவு தூரம் புண்படுத்தும். தீர்ப்புக்கு தான் மேல்முறையீடு செய்ய முடியும். இது ஏற்பாடு. ஏற்பாட்டிற்கு மேல்முறையீடு செய்ய முடியாது என்று அரசாங்கத்துக்கும் தெரியும். அதனால்தான் சொல்கிறேன். அவர்கள் இந்துக்களையும் சிறுபான்மையினரையும் ஏமாற்றுகிறார்கள்.

திமுக பாதையில் சென்றால்

மேல்முறையீடு செய்வதன் மூலம் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்கிற மனநிலையை இந்துக்களுக்கு தெரியப்படுத்தி விட்டார்கள். மேலும் இதே மேல்முறையீட்டின் மூலம் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்கிற பொய்யான மனப்பான்மையை சிறுபான்மையினருக்கு தெரிவிக்கிறார்கள்.சென்ற ஆட்சி தோற்றதற்கு இந்து எதிர்ப்பு உணர்வு காரணம். சனாதனத்தை ஒழிப்பேன் என்று சொன்னார்கள். மக்கள் அவர்களை ஒழித்து விட்டார்கள். தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஒரு எச்சரிக்கை நான் கொடுக்கிறேன். திமுக பாதையில் சென்றால் திமுகவுக்கு ஏற்பட்ட நிலைதான் உங்களுக்கும் ஏற்படும். நாங்கள் போராடி வெற்றி பெறுவோம்” என்றார்.

X