திருவள்ளூர்: அமோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழப்பு - நயினார் நாகேந்திரன் இரங்கல்

சிகிச்சை பெற்று வரும் அத்தனை பேரும் விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக் கொள்வதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே, இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையுமளிக்கின்றன.

ஆழ்ந்த இரங்கல்

உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்வதோடு, சிகிச்சை பெற்று வரும் அத்தனை பேரும் முழு உடல் நலத்துடன் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை மையமாகக் கொண்ட நமது மாநிலத்தில், கடந்த சில காலங்களாகவே தொழில் நடக்கும் பகுதிகளில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் தொடர்வதும் அதனால் உயிர்பலிகள் உண்டாவதும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

ஆய்வு செய்ய வேண்டும்

எனவே, தொழிலாளர்களின் உயிர் காக்கும் வகையில் தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றனவா, அங்கே எதிர்பாரா விபத்துக்களைக் கையாளும் தொழில்நுட்பங்கள் உள்ளனவா உள்ளிட்டவைகளை உடனடியாக ஆய்வு செய்து, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென முதல்-அமைச்சர் விஜய்யை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com