திருவள்ளூர்: பஜ்ஜி சாப்பிட்ட 9 வயது சிறுமி உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர், தனது 9 வயது மகளுடன் பெரியபாளையம் அடுத்த தண்டலம் பஜார் வீதிக்கு சென்றபோது, அங்குள்ள ஒரு கடையில் மகளுக்கு பஜ்ஜி வாங்கி கொடுத்துள்ளார்.
பஜ்ஜி சாப்பிட்ட 9 வயது சிறுமி உயிரிழப்பு.
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியில் பஜ்ஜி சாப்பிட்ட 9 வயது சிறுமி திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

9 வயது சிறுமி

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் லச்சுவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் ஸ்ரீத்திகா (வயது 9). இவர் லச்சுவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். செந்தில்குமார், செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

பஜ்ஜி சாப்பிட்டபோது திடீரென வாந்தி எடுத்து மயக்கம்

கடந்த 3-ந்தேதி செந்தில்குமார் தனது மகள் ஸ்ரீத்திகாவுடன் பெரியபாளையம் அடுத்த தண்டலம் பஜார் வீதிக்கு சென்றார். பின்னர் அங்குள்ள ஒரு கடையில் மகளுக்கு பஜ்ஜி வாங்கி கொடுத்துள்ளார். பஜ்ஜியை சாப்பிட்டுக்கொண்டிருந்த ஸ்ரீத்திகா திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் உடனடியாக மகளை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

சிறுமி உயிரிழப்பு

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் ஸ்ரீத்திகா அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த சனிக்கிழமை இரவு சிறுமி ஸ்ரீத்திகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com