

திருவள்ளூர்,
உதயநிதி ஸ்டாலினுக்கு பேனர் வைத்த இளைஞர்கள் 2 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். இவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பேரன் ஆவார்.
சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வான உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராகவும், திமுக இளைஞரணி செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருவள்ளூர் மாவடம் வெண்கல் அருகே வாணி சத்திரம் பகுதியில் பிறந்தநாள் வாழ்த்து பேனர் கட்டப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகளான அண்ணாநகர் பகுதியை சேர்ந்த வீரவேந்தர் (வயது 22), காரணி கிராமத்தை சேர்ந்த வேலன் (வயது 30), வாணியச்சத்திரத்தை சேர்ந்த ஆல்பர்ட் (வயது 22) ஆகிய 3 பே பேனர் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின்சார கம்பி மீது இரும்பு கம்பிகளால் அமைக்கப்பட்ட பேனர் உரசியது. இதில் பேனரில் மின்சாரம் பாய்ந்து அதை பிடித்திருந்த 3 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட நிலையில் வீரவேந்தர், வேலன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரு இளைஞர்களும் அப்பகுதி திமுக ஒன்றிய செயலாளர் தங்கம் முரளி என்பவரின் உறவினர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.