திருவள்ளூர்: சிமெண்டு கல்லால் தாக்கப்பட்ட வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் இடையே சமையல் செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், இரவு தூங்கிக்கொண்டிருந்த 2 பேரை மற்றொருவர் கல்லால் தாக்கியுள்ளார்.
வடமாநில தொழிலாளி உயிரிழப்பு.
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பகுதியில் சிமெண்டு கல்லால் தாக்கப்பட்ட வடமாநில தொழிலாளி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து, கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வடமாநில தொழிலாளர்கள்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராம் கரிமேடு அண்ணாநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சமீம் (வயது 23), நசீம்(29), ஜார்கண்டை சேர்ந்த இஸ்மாயில்ஷேக்(20) ஆகியோர் தங்கி வேலை செய்து வந்தனர்.

கல்லால் தாக்குதல்

சமையல் செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், கடந்த 16-ந்தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்த சமீம், நசீம் ஆகியோரை இஸ்மாயில்ஷேக் சிமெண்டு கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர்.

கொலை வழக்குப்பதிவு

சமீம், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பட்டாபிராம் போலீசார் இஸ்மாயில்ஷேக்கை கைது செய்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com