திருவள்ளூர்: கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பெயிண்டர் ஓட, ஓட வெட்டிக்கொலை- 5 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மோட்டார்சைக்கிள் மீது காரை மோதி பெயிண்டர் ஓட, ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை செய்யப்பட்ட மாரி மற்றும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் பயன்படுத்திய கார்.
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மோட்டார்சைக்கிள் மீது காரை மோதி பெயிண்டர் ஓட, ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பைக் மீது கார் மோதல்

திருவள்ளூர் அருகே உள்ள சிற்றத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி(எ) ரூபன் (வயது 32). பெயிண்டரான இவர் மீது அடிதடி குற்ற வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்வாரிய அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்தது தொடர்பாக மாரியை போலீசார் கைது செய்திருந்தனர். சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த அவர் வெங்கல் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார். வழக்கம் போல் நேற்று காலை 11 மணியளவில் மாரி தனது நண்பர் வெங்கடேசனுடன் மோட்டார் சைக்கிளில் வெங்கல் போலீஸ் நிலையத்தில் வந்து கையெழுத்து போட்டார். பின்னர் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். வெங்கடேசன் மோட்டார் சைக்கிளை ஓட்ட பின்னால் மாரி அமர்ந்து சென்றார். பாகல்மேடு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கார் ஒன்று திடீரென மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

வெட்டிக்கொலை

இதில், நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளோடு இருவரும் கீழே விழுந்தனர். உடனே காரில் இருந்த 5 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மாரியை சுற்றி வளைத்தனர். இதனால் பதற்றம் அடைந்த மாரி அவர்களிடம் இருந்து உயிர் தப்பிப்பதற்காக தப்பி ஓட முயன்றார். இருப்பினும் கொலை வெறி கும்பல் மாரியை பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த மாரி ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

3 பேரை பிடித்த பொதுமக்கள்

அவரது கையின் மணிக்கட்டு பகுதி துண்டாகி தனியாக கிடந்தது. மேலும் மாரியின் முகம் முழுவதும் வெட்டி சிதைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொது மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். கொலை திட்டத்தை அரங்கேற்றிய கும்பல் மீண்டும் காரில் ஏறி தப்பி செல்ல முயன்றனர். பதற்றத்தில் அவர்கள் காரை ஓட்டி சென்றபோது அருகில் உள்ள ஒரு வீட்டின் சுவரின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டு நின்றது. இதையடுத்து திரண்டு வந்த பொதுமக்கள் 3 பேரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து வெங்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

5 பேர் கைது

கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய கார், அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரும் கீழானூர் பகுதியைச் சேர்ந்த தீனா(25), நரேஷ்(20), விக்கி(எ) கலாநிதி(23) என்பது தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய மேலானூர் பகுதியைச் சேர்ந்த பேரரசு(19), ராஜ்குமார்(20) ஆகிய 2 பேரை ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

கள்ளத்தொடர்பு

போலீஸ் விசாரணையில் தீனாவின் திருமணம் ஆன சகோதரி தீபாவுடன் மாரி கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் தீபாவின் கணவர் தனது மனைவியை அடித்து உதைத்து அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் தீபா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு பழி தீர்க்கும் வகையில் தீனா இந்த கொலையில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட பெயிண்டர் மாரிக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com