

திருவண்ணாமலை,
திருவண்ணாமலையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணியளவில் திருவண்ணாமலை பெரியார் சிலை வழியாக ரெயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென கல்லூரி மாணவர்களை வழி மறித்து அவர்களிடம் இருந்த செல்போன்கள் மற்றும் பணத்தை பறித்தனர்.
தடுக்க முயன்ற மாணவர்களை தாக்கியுள்ளனர். பின்னர் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சோதனை செய்து நடத்திய விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் உடந்தையாக இருந்த ஒருவர் என 3 பேரை போலீசார் அரை மணி நேரத்திற்குள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையை சேர்ந்த கிஷோர் (வயது 21), மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரகாஷ் (23), தினேஷ் (23) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.