

களம்பூர்,
செண்பகத்தோப்பு அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா படவேடு கிராமத்தில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு அணை 62 அடி உயரம் கொண்டது. ஜவ்வாது மலை பகுதியில் மழை பெய்து காட்டாற்று வெள்ளம் வருவ தால் செண்பகத் தோப்பு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
தற்போது 57 அடி உயரம் தண்ணீர் உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 57 அடிக்கு மேல் அணைக்குவரும் நீரை திறந்துவிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று பகல் 12 மணி அளவில் உதவி பொறியாளர் ராஜ கணபதி தலைமையிலான குழுவினர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டனர்.
தற்போது செண்பகத்தோப்பு அணைக்கு 100 கன அடி நீர் வருகிறது. இந்த நீர் அப்படியே திறந்து விடப்பட்டு அலியாபாத் அணைக்கட்டு மூலம் ஏரிக்கால்வாய் வழியாக சந்தவாசல், காங்கரானந்தல். கிருஷ்ணாவரம், களம்பூர், நாராயணமங்கலம், ஏரிகுப்பம் போன்ற கிராமங்களை உள்ளடக்கிய 16 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை மழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே கமண்டல நாகநதி ஆற்றின் இருகரைகளிலும் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கடக்கவோ கூடாது என நீர்வளத் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.