அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்: திருச்சி கிழக்கில் விஜயை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் த.வெ.க.வில் ஐக்கியம்!

ராஜசேகரன், அ.தி.மு.க. தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்தார்.
அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்: திருச்சி கிழக்கில் விஜயை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் த.வெ.க.வில் ஐக்கியம்!
Published on

திருச்சி,

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு முதல்-அமைச்சர் விஜய் வெற்றி பெற்றார். பிறகு, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். திருச்சி கிழக்கு தொகுதியில் விஜயை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் களம் இறக்கப்பட்டவர், ராஜசேகரன். தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், கட்சிப் பதவியான திருச்சி மாநகர் மாவட்ட பொருளாளராக மட்டும் இருந்து வந்தார். இந்த நிலையில், அ.தி.மு.க. தலைமை மீது அதிருப்தியில் இருந்த அவர், இன்று சென்னையில் த.வெ.க.வில் இணைந்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம்

முன்னதாக, அவர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் பதவி வழங்கியமைக்கும், 2026 சட்டசபை தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியமைக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அரசியல் கொள்கை சார்ந்த நிலைப்பாடுகள், மக்கள் நலன் குறித்த எனது பார்வை, எதிர்கால பொது வாழ்க்கை பயணத்தை முன்னிறுத்தி ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு கனத்த இதயத்துடனும், கலங்கிய மனதுடனும் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இந்த மகத்தான இயக்கத்தின் திருச்சி பொருளாளர் பொறுப்பு உள்ளிட்ட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com