இது வெற்று விளம்பர ஆட்சி - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்


பள்ளிக்கு படிக்கச் செல்ல வேண்டிய மாணவர்கள், அரிவாள் கொண்டு செல்லும் நிலை இருக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

திண்டுக்கல்,

'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பிரசாரம் செய்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

வேடசந்தூர் தொகுதி மக்கள், திமுக அரசின் வெற்று விளம்பரங்களை துளி கூட நம்பவில்லை. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்? என்பதைப் போல, வெள்ளை அறிக்கை கேட்டால், வெற்றுப் பேப்பரைக் காட்டுகிறது இன்றைய ஸ்டாலின் மாடல் அரசு. கொலை, கொள்ளை, பாலியல் தொந்தரவால் தமிழ்நாடு தலைகீழாக மாறிவிட்டது. போதைப்பொருளை கட்டுப்படுத்தியிருந்தால் இந்நிலை வந்திருக்காது.

100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் தராத ஆட்சி இது. 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவரால், 3ஆம் வகுப்பு பாடத்தை சரியாக படிக்க முடியவில்லை. பள்ளிக்கு படிக்கச் செல்ல வேண்டிய மாணவர்கள், அரிவாள் கொண்டு செல்லும் நிலை இருக்கிறது.

டி.ஆர்.பி.ராஜா அவர்களே உங்களுடைய ஆட்சி வெற்று விளம்பர ஆட்சி என்பதை, நீங்கள் வெள்ளை காகிதத்தை காட்டி நிரூபித்துவிட்டீர்கள்.தொழில்துறை அமைச்சர் வெற்றுக் காகிதத்தைக் காட்டிவிட்டு வெள்ளை அறிக்கை என்கிறார். ரூ.10 லட்சம் கோடி முதலீடு கிடைத்ததாகக் கூறும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்த ஆட்சி வெற்று விளம்பர ஆட்சி. பொய்யைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாது. தமிழ்நாட்டோட கல்வி வளர்ச்சியை பாராட்டுவதற்காக தெலுங்கானா முதல்-அமைச்சர் தமிழ்நாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக வந்துள்ளார். அப்படியா தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி உயர்ந்திருக்கிறது?

தாங்கள் மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்த திராவிட மாடல் அரசை, #ByeByeStalin சொல்லி மக்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப் போவது தான் 2026 சட்டமன்றத் தேர்தல் சொல்லப்போகும் செய்தி.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story