விலைவாசி உயர்வுக்கான காரணம் இதுதான் - அமைச்சர் வெங்கடரமணன் பேட்டி

உணவு பதுக்கலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் வெங்கடரமணன் கூறினார்.
விலைவாசி உயர்வுக்கான காரணம் இதுதான் - அமைச்சர் வெங்கடரமணன் பேட்டி
Published on: 

சென்னை,

உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

"என் வாழ்க்கையையே நான் ரேஷன் கடையில்தான் வாழ்ந்திருக்கிறேன். வரிசையில் நின்று எல்லா பொருட்களும் வாங்கித்தான், இன்று அமைச்சராக வந்திருக்கிறேன். ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து அரிசி வரத்து குறைந்ததால் இங்கு விலை ஏறியுள்ளது என்றே கூறினேன். நான் பேசியதை முழுதாகக் கேட்காமல், எனக்கு சவால் விடுகின்றனர்.

படிப்படியாக உயர்வு

2023ல் அரிசி விலை கிலோவுக்கு ரூ.53 என இருந்தது. 2024ல் ரூ.60, 2025ல் 65 என விற்பனை செய்யப்பட்டது. உணவுப்பொருட்களின் விலை படிப்படியாக உயர்ந்துள்ளது. இதெல்லாம் முன்னாள் அமைச்சர்கள் கவனித்திருக்க மாட்டார்கள்.

கர்நாடக பொன்னி அரிசி, ஆந்திர பொன்னி அரிசியின் வரத்து தமிழகத்துக்கு குறைவாகவே உள்ளது. சன்ன ரக அரிசியை தான் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இன்று முதல் 25 ஆயிரம் மெட்ரிக் டன் சன்ன ரக அரிசி 250 அமுதம் அங்காடிகள் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

உணவு பதுக்கலை தடுக்க நடவடிக்கை

தமிழகத்தில் உள்ள அமுதம் அங்காடிகளில் குறைந்த விலைக்கு உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைக்கு தேவையான பொருட்கள் தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

சில அரசியல் கட்சிகளை சேர்ந்த வியாபாரிகள் உணவுப் பொருட்களை குடோன்களில் பதுக்குகின்றனர். இதனால் விலைவாசி உயர்வு ஏற்படுகிறது. உணவு பதுக்கலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். விலைவாசி கண்கானிப்பு குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.”

இவ்வாறு அவர் பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com