

தூத்துக்குடி,
தூத்துக்குடியில் கையில் அரிவாளுடன் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் ரீல்ஸ் பதிவிடுவதைத் தடுக்கும் வகையில், மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் உத்தரவின்பேரில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர், கையில் அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து, சிப்காட் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அந்த வீடியோவில் இருந்தது மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் மகன் முகிலன் (வயது 19), தெற்கு சங்கரபேரி முத்துதுரை மகன் பெரியசாமி(எ) விக்கி(19) மற்றும் குறிஞ்சிநகர் சுடர் வடிவேலன் மகன் சதீஷ்குமார்(19) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது.
உடனடியாக விரைந்து செயல்பட்ட சிப்காட் போலீசார் அந்த 3 வாலிபர்களையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் மீது ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ பதிவிட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் ரீல்ஸ் பதிவிடுவது சட்டப்படி குற்றம் எனவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அதிரடி கைது சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.